அமெரிக்காவின் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக தலா ரூ. 1.60 லட்சம் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
சேவை மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில், ’வீரர்களுக்கான ஈவுத்தொகை’ வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மக்களுக்கு புதன்கிழமை அதிபர் டிரம்ப் ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது:
“நான் பதவிக்கு வந்த முதல் நாளிலேயே, நாட்டின் தெற்கு எல்லையில் நடந்த ஊடுருவலைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுத்தேன். கடந்த ஏழு மாதங்களாக, ஒரு வெளிநாட்டினர்கூட சட்டவிரோத நமது நாட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை. இது முற்றிலும் சாத்தியமற்றது என்று அனைவரும் கூறிய ஒரு சாதனையாகும்.
நான் அமெரிக்காவின் வலிமையை மீட்டெடுத்துள்ளேன். 10 மாதங்களில் 8 போர்களை முடிவுக்குக் கொண்டுவந்தேன், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலை அழித்தேன், காஸா போரை முடிவுக்குக் கொண்டுவந்தேன். இதனால், 3000 ஆண்டுகளில் முதல்முறையாக மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தியுள்ளேன். மேலும் உயிருடனும் பிணமாகவும் இருந்த அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்தேன்.
ஏற்கெனவே, அமெரிக்காவில் 18 டிரில்லியன் டாலர் முதலீட்டை நான் ஈர்த்துள்ளேன். இதன்பொருள், வேலைவாய்ப்புகள், ஊதிய உயர்வுகள், வளர்ச்சி, தொழிற்சாலைகள் திறப்பு மற்றும் மிகச் சிறந்த தேசிய பாதுகாப்பு ஆகும். இந்த வெற்றியின் பெரும்பகுதி வரிகளின் மூலம் சாதிக்கப்பட்டுள்ளது. எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை - வரிகள். பல தசாப்தங்களாக மற்ற நாடுகள் நமக்கு எதிராக இதை வெற்றிகரமாகப் பயன்படுத்தி வந்தன. ஆனால் இனி அது நடக்காது. அமெரிக்காவில் நிறுவனங்களைக் கட்டினால் வரிகள் இல்லை என்பதை அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால், நாம் இதுவரை கண்டிராத அளவில் தொழிற்சாலைகளையும் ஆலைகளையும் அமெரிக்காவில் அவர்கள் கட்டி வருகின்றனர்.
14,50,000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு கிறிஸ்துமஸுக்கு முன்பாக சிறப்புப் போர்வீரர் ஈவுத்தொகை வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் நான் பெருமை கொள்கிறேன். 1776-ல் நமது தேசம் நிறுவப்பட்டதைக் கௌரவிக்கும் விதமாக, ஒவ்வொரு வீரருக்கும் 1,776 டாலர்களை (இந்திய மதிப்பின்படி ரூ. 1.60 லட்சம்) வழங்கவுள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.