வங்கதேச தேர்தலை சீர்குலைக்க இடைக்கால பிரதமர் யூனுஸ் தலைமை மாணவர் தலைவர் ஹாதியை கொடூரமாகக் கொன்றதாக அவரது சகோரதர் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த மாணவர்கள் போராட்டத்தில் முன்னணி வகித்த ஷரீஃப் உஸ்மான் ஹாதி மர்ம நபர்களால் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி சுடப்பட்டு, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 18 ஆம் தேதி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால், வங்கதேசத்தில் பெரும் போராட்டம் வெடித்தது. அவரைத் தொடர்ந்து அந்தப் போராட்டத்தை வழிநடத்திய மேலும் ஒரு மாணவர் தலைவரான மொதாலெப் ஷிக்தெர் மா்ம நபா்களால் திங்கள்கிழமை சுடப்பட்டார்.
இந்த நிலையில், வங்கதேச தேர்தலை சீர்குலைக்கும் விதமாகவும், ஹாதியின் வளர்ச்சியைப் பிடிக்காத இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ் தலைமையிலான அரசு, அவரசு ஆள் வைத்து சுட்டுக்கொன்றதாகவும் ஹாதியின் சகோதரர் ஒமர் ஹாதி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்ததாக வங்கதேச நாளிதழனான தி டெய்லிஸ்டார் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஷாஃபாக்கில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தின் முன் இன்குலாப் மோஞ்சா ஏற்பாடு செய்த ஷாஹிதி ஷபோத்( தியாகிகளின் உறுதி) என்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய ஹாதியின் சகோதரர் ஒமர் ஹாதி, “உஸ்மாஸ் ஹாதி நீங்கள் தான் கொன்றீர்கள், இதைப் பயன்படுத்தி பொதுத் தேர்தலை சீர்குலைக்கப் பார்க்கிறீர்கள்.
தேர்தலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு விசாரணையை தொடருங்கள். ஆளும் அரசு விசாரணையில் வெளிப்படைத் தன்மையைக் காட்டத் தவறிவிட்டது. ஹாதியின் கொலைக்கு நீதி கிடைக்காவிட்டால் நீங்களும் ஒருநாள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்படலாம். எந்தவொரு வெளிநாட்டு எஜமானருக்கும் எனது சகோதரர் அடிபணியாததால் கொல்லப்பட்டுள்ளார்” என உணர்ச்சிப் பொங்க பேசியுள்ளார்.
பின்னணி என்ன?
வங்கதேசத்தில் முன்னணிக் கட்சியாக திகழும் தேசிய குடிமக்கள் கட்சியின் (என்சிபி) குல்னா மண்டலத் தலைவரும் கட்சியின் தொழிலாளர் முன்னணி மத்திய ஒருங்கிணைப்பாளருமான மொதாலெப் ஷிக்தொ் மீது தென்மேற்கு குல்நா நகரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஹாதியை தலையில் சுட்டதுபோல, இவா் மீதும் மர்ம நபர்கள் தலையைக் குறிவைத்து சுட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்தாண்டு வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து, பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் இன்கிலாப் மஞ்சா என்ற சமூக-கலாசார அமைப்பு தொடங்கப்பட்டடு, அதன் செய்தித் தொடா்பாளராக இருந்த ஷரீஃப் உஸ்மான் ஹாதி (32), அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் பொதுத் தோ்தலில் போட்டியிட இருந்தார்.
இதையொட்டி, தேர்தல் பரப்புரையில் ஈடுபட கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி தலைநகா் டாக்காவில் ரிக்ஷாவில் சென்று கொண்டிருந்தபோது, அவரை இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டதில் பலத்த காயமடைந்த ஹாதி, டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னா், மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டு, கடந்த 18-ஆம் தேதி உயிரிழந்தார். ஹாதியை ஃபைசல் கரீம் மசூத் என்பவர் சுட்டதாக காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.