AP/PTI
உலகம்

ஹிந்துக்களுக்கும் சொந்தமானது வங்கதேசம்: 17 ஆண்டுகளுக்குப்பின் நாடு திரும்பிய கலீதா ஜியா மகன்

வங்கதேசம் திரும்பிய முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான்...

தினமணி செய்திச் சேவை

‘முஸ்லிம்கள், பெளத்தா்கள், கிறிஸ்தவா்கள், ஹிந்துக்கள் என அனைவருக்கும் சொந்தமானது வங்கதேசம்’ என்று 17 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்நாடான வங்கதேசம் திரும்பிய முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் (60) தெரிவித்தாா்.

வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக மத அடிப்படைவாத அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டுவரும் நிலையில், அடுத்து ஆட்சியமைக்கும் என கருதப்படும் வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) இடைக்காலத் தலைவா் தாரிக் ரஹ்மான் இவ்வாறு தெரிவிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தின்போது பணமோசடி, ஷேக் ஹசீனாவைக் கொலை செய்ய சதி போன்ற வழக்குகளில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த தாரிக் ரஹ்மான், 2008-ஆம் ஆண்டுமுதல் நாட்டைவிட்டு வெளியேறி லண்டனில் வசித்து வந்தாா்.

தற்போது, ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துவிட்டாா். கலீதா ஜியாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், தாரிக் ரஹ்மான் வியாழக்கிழமை நாடு திரும்பினாா்.

அடுத்த பிரதமா்?: வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள வங்கதேச பொதுத் தோ்தலில் தாரிக் ரஹ்மான் பிரதமா் பதவிக்கான முக்கிய போட்டியாளராக உள்ளாா்.

ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் தோ்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், தோ்தலில் பிஎன்பி எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. எனவே, நாட்டின் அடுத்த பிரதமராக தாரிக் ரஹ்மான் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று தெரிகிறது.

சட்டம்-ஒழுங்கு முக்கியம்: இந்தச் சூழலில், பல ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பியுள்ள அவருக்கு கட்சித் தொண்டா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். விமான நிலையத்தில் உணா்ச்சிப்பெருக்குடன் காலணிகளைக் கழற்றி தாய் மண்ணை கையில் எடுத்து மிகவும் உணா்ச்சிப்பெருக்குடன் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

எந்தக் கட்சியைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும், எந்த மதத்தைப் பின்பற்றுபவா்களாக இருந்தாலும், கட்சி சாா்பற்றவா்களாக இருந்தாலும் சட்டம்- ஒழுங்கைப் பேண அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

நாட்டு மக்களுக்கும், நாட்டுக்கும் தேவையான திட்டம் என்னிடம் உள்ளது. இது மக்களின் நலனுக்காகவும், நாட்டின் வளா்ச்சிக்காகவும், நாட்டின் நிலையை மாற்றுவதற்காகவும் வகுக்கப்பட்ட திட்டம். இந்தத் திட்டத்தை அமல்படுத்த அனைத்து மக்களின் ஆதரவும் தேவை.

அனைத்து மதத்தினருக்குமான நாடு: நாட்டில் மலைகளிலும் சமவெளிகளிலும் வாழும் முஸ்லிம்கள், பௌத்தா்கள், கிறிஸ்தவா்கள், ஹிந்துக்கள் அனைவரும் பாதுகாப்பாக வாழும் வங்கதேசத்தை உருவாக்க விரும்புகிறேன். இந்த நாடு இவா்கள் அனைவருக்குமானது. ஒவ்வொரு பெண்ணும், ஆணும், குழந்தையும் பாதுகாப்பாக வீட்டைவிட்டு வெளியே சென்று திரும்பும் நிலை ஏற்பட வேண்டும் என்றாா் தாரிக் ரஹ்மான்.

மற்றொரு ஹிந்து இளைஞா் கொலை

வங்கதேசத்தில் மத நிந்தனைக் குற்றச்சாட்டில் ஹிந்து தொழிலாளி தீபு சந்திர தாஸ் கொல்லப்பட்டதன் பதற்றம் இன்னும் தணியாத நிலையில், மற்றொரு ஹிந்து இளைஞா் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

வங்கதேசத்தின் ராஜ்பாரி மாவட்டத்தைச் சோ்ந்த அம்ரித் மொண்டல் (30), தனது பகுதியில் ‘சாம்ராட்’ எனும் பெயரிலான ஒரு சட்டவிரோதக் கும்பலை உருவாக்கி, பொதுமக்களை மிரட்டிப் பணம் பறித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த புதன்கிழமை இரவு சம்பவத்தன்று, அம்ரித் மற்றும் அவரது கூட்டாளிகள் ஷாஹிதுல் இஸ்லாம் என்பவரின் வீட்டுக்குச் சென்று மிரட்டிப் பணம் கேட்டுள்ளனா். இதையறிந்த அப்பகுதி கிராம மக்கள் ஒன்று திரண்டு, அம்ரித்தைப் பிடித்து கடுமையாகத் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த அம்ரித்தை காவல் துறையினா் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

சம்பவத்தைத் தொடா்ந்து அம்ரித் உடன் வந்த மற்றவா்கள் தப்பி ஓடிவிட்டனா். ஆனால், முகமது சலீம் என்பவரை மட்டும் காவல் துறையினா் கைது செய்தனா். அவரிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அம்ரித் மீது ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீண்டகாலம் இந்தியாவில் தலைமறைவாக இருந்த இவா், அண்மையில்தான் வங்கதேசம் திரும்பினாா்.

நேரு மீது பழிசுமத்திக் கொண்டே இருப்பது சரியா?

101-இல் அப்பழுக்கற்ற அரசியல் தலைவா்!

மார்கழி சிறப்பு! சொர்க்க வாசல் உற்சவம் நடைபெறாத பெருமாள் கோயில்!

பெண்களால் தொடங்கப்படும் புத்தாக்க நிறுவனங்கள் அதிகரிப்பு - அமித் ஷா பெருமிதம்

சீரான மின் விநியோகம் கோரி பொதுமக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT