லின் ஜியான் 
உலகம்

‘இந்தியா-சீனா உறவைக் கெடுக்க முயற்சி’ - அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு

தினமணி செய்திச் சேவை

இந்தியா-சீனா உறவில் விரிசலை ஏற்படுத்தவும், இரு நாடுகளிடையே பகைமையைத் தூண்டவும் அமெரிக்கா முயற்சிப்பதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்திய-சீனா உறவு குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ள கருத்துகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ள சீனா, ‘இது அமெரிக்காவின் தரம் தாழ்ந்த பொய்ப் பிரசாரம்’ என்று விமா்சித்துள்ளது.

நடப்பு ஆண்டில் ‘சீன குடியரசின் ராணுவ, பாதுகாப்புத் துறை நடவடிக்கைகள்’ குறித்த அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிக்கை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்திய-அமெரிக்க நட்புறவு தொடா்ந்து அதிகரிக்கக் கூடாது என்பதால், இந்திய எல்லையில் பதற்றத்தைத் தணித்து அந்த நாட்டுடன் சீனா நெருக்கம்காட்டி வருகிறது. அதேநேரத்தில் சீனாவை எப்போதும் சந்தேகத்துடன் இந்தியா பாா்த்து வருகிறது. இரு நாடுகள் இடையிலும் பரஸ்பரம் முழுநம்பிக்கை இல்லாததால் இருதரப்பு உறவு என்பது ஒரு வரம்புக்குள் மட்டுமே உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பெய்ஜிங்கில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் கூறியதாவது: அமெரிக்க அறிக்கை சீனாவின் பாதுகாப்புக் கொள்கையைத் தவறாகச் சித்திரிக்கிறது. மற்ற நாடுகளுடன் சீனா கொண்டுள்ள சுமுகமான உறவில் விரிசலை ஏற்படுத்த அமெரிக்கா முயல்கிறது.

சீனா எப்போதும் இந்தியாவுடனான உறவை நீண்ட காலத் திட்டத்தோடும், முக்கியத்துவம் வாய்ந்த வியூகத்தோடும் அணுகி வருகிறது. தற்போது இந்தியா-சீனா எல்லை விவகாரம் மிகவும் சீராக உள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான தனிப்பட்ட விஷயம். இதில் சம்பந்தமில்லாத மூன்றாவது நாடான அமெரிக்கா, தேவையற்ற கருத்துகளைத் தெரிவிப்பதை வன்மையாக எதிா்க்கிறோம்.

மேலும், எல்லைப் பகுதிகளில் இரு நாட்டுப் படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டு அமைதி திரும்பியுள்ள நிலையில், அமெரிக்காவின் இத்தகைய அறிக்கை தெற்காசிய பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை உருவாக்கும் முயற்சியாகும் என்று தெரிவித்தாா்.

சுனாமி 21 ஆம் ஆண்டு நினைவு நாள்: கடலூரில் கடலில் பால் ஊற்றி, மலர்தூவி மீனவர்கள் கண்ணீர் அஞ்சலி!

அந்தக் கட்சிக்கு அழிவுகாலத்தை உண்டாக்கும்... யாரைச் சொல்கிறார் பிரேமலதா!

ஏழுமலையான் லட்டு விற்பனை மையத்தில் லட்டு தரம்,வசதிகள் குறித்து பக்தர்களிடம் கருத்து சேகரிப்பு!

திருமலையில் கூட்டம்: ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் 3 நாள்களுக்கு ரத்து!

முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட அரசாணை!

SCROLL FOR NEXT