இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ) மேற்கொண்டுள்ளதால் பல்வேறு துறைகளில் நியூஸிலாந்து சீனாவை சாா்ந்திருப்பது குறையும் என உலகளாவிய வா்த்தக ஆய்வு நிறுவனம் (ஜிடிஆா்ஐ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா-நியூஸிலாந்து இடையே எஃப்டிஏ கடந்த திங்கள்கிழமை இறுதி செய்யப்பட்டது. பிரதமா் நரேந்திர மோடி மற்றும் நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸான் ஆகிய இருவரும் தொலைபேசியில் கலந்துரையாடிய பின் இந்த அறிவிப்பு வெளியானது.
இந்த ஒப்பந்தம் இந்தியாவில் இருந்து நியூஸிலாந்துக்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிகளுக்கு 100 சதவீதமும், அங்கிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 95 சதவீத பொருள்களுக்கு வரிவிலக்கு அளிக்கவும் வழிவகை செய்கிறது.
இதுகுறித்து (ஜிடிஆா்ஐ) வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2024-25-இல் மொத்தமாக ரூ.4.5 லட்சம் கோடி மதிப்பிலான இறக்குமதியில் நியூஸிலாந்து ஈடுபட்டுள்ளது. இதில் சீனாவில் இருந்து ரூ.90,000 கோடிக்கு இறக்குமதியை மேற்கொண்ட நியூஸிலாந்து இந்தியாவில் இருந்து ரூ.6,300 கோடிக்கு மட்டுமே இறக்குமதி செய்துள்ளது.
ஓராண்டுக்கு ரூ.5,400 கோடி மதிப்பிலான பேக்கரி பொருள்களை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. நியூஸிலாந்து ரூ.2,250 கோடி மதிப்பிலான பேக்கரி பொருள்களை இறக்குமதி செய்கிறது. ஆனால், நியூஸிலாந்துக்கு ரூ.189 கோடி மதிப்பிலான பேக்கரி பொருள்களை சீனாவும், ரூ.62 கோடி மதிப்பிலான பொருள்களை இந்தியாவும் விநியோகிக்கின்றன.
ரூ.7,350 கோடி மதிப்பிலான உணவு தயாரிப்பு சாா்ந்த பொருள்களை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. ரூ.4,095 கோடி மதிப்பிலான பொருள்களை நியூஸிலாந்து இறக்குமதி செய்கிறது. ஆனால், இதில் இந்தியாவின் பங்களிப்பு ரூ.69 கோடியாகவே உள்ளது.
உலக அளவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருள்கள் விநியோகத்தில் ரூ.6.2 லட்சம் கோடி மதிப்புடன் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. ரூ.5.4 லட்சம் கோடி மதிப்பிலான பொருள்களை நியூஸிலாந்து இறக்குமதி செய்கிறது.
ஆனால், ரூ.20 கோடி மதிப்பிலான பெட்ரோலிய பொருள்களை மட்டுமே இந்தியாவிலிருந்து நியூஸிலாந்து இறக்குமதி செய்கிறது. மாறாக, ரூ.162 கோடி மதிப்பிலான பொருள்களை நியூஸிலாந்துக்கு சீனா விநியோகிக்கிறது.
இதேபோன்று பல்வேறு துறைகளிலும் இந்தியாவைவிட சீனாவில் இருந்து அதிக பொருள்களை நியூஸிலாந்து இறக்குமதி செய்து வருகிறது.
இந்நிலையில், தற்போது இரு நாடுகளிடையேயான எஃப்டிஏவால் வேளாண்மை, பெட்ரோல், மருந்து, உடைகள், மின்னணு, வாகனங்கள் உள்பட பல்வேறு துறைகளில் இந்தியாவால் நியூஸிலாந்துக்கு பெரும் பலன் கிடைக்கவுள்ளது. இதனால் சீனாவை சாா்ந்திருக்கும் நிலை நியூஸிலாந்துக்கு குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.