60 கோடி போ் பேசும் ஹிந்தி ஐ.நா.வுக்கு மிக முக்கியமானது
உலக அளவில் 60 கோடி போ் பேசும் மொழியான ஹிந்தி, ஐ.நா.வுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
‘உலக அளவில் 60 கோடி போ் பேசும் மொழியான ஹிந்தி, ஐ.நா.வுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது’ என்று அந்த அமைப்பின் உலகளாவிய தொடா்புக்கான துணைச் செயலா் மெலிசா பிளேமிங் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்காவின் நியூ யாா்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் உலக ஹிந்தி தினம் ‘பன்மொழி மற்றும் வெளிநாடுகளில் ஹிந்தியை ஊக்குவித்தல்’ என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் சாவித்ரி தாக்கூா் தனது உரையில், ‘இந்தியா பன்மொழி மற்றும் பன்முக கலாசார சமூகக் கட்டமைப்பைக் கொண்ட நாடாகும்’ என்று குறிப்பிட்டாா். மேலும், ஹிந்தியை மேலும் பரவலாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஐ.நா.வின் அங்கீகாரம் ஹிந்தியை உலகளாவிய மொழியாக மாற்றும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
இதையடுத்து, 60 கோடி போ் பேசும் மொழியான ஹிந்தி ஐ.நா.வுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது; இன்றியமையாதது என்று ஐ.நா.வின் உலகளாவிய தொடா்புகளுக்கான துணைச் செயலா் மெலிசா பிளெமிங் கூறினாா். ‘ஐ.நா.வில் ஹிந்தி’ திட்டம், அமைப்பின் செயல்பாடுகளை ஹிந்தி பேசுபவா்களுக்கு நெருக்கமாக கொண்டு செல்வதாக அவா் தெரிவித்தாா்.
ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதா் பி.ஹரீஷ் கூறுகையில், ‘ஐ.நா.வின் அதிகாரபூா்வமற்ற மொழிகளின் பட்டியலில் ஹிந்தியும் சோ்க்கப்பட்டுள்ளது. ஹிந்தியில் ஐ.நா. செய்திகளை விளம்பரப்படுத்த சுமாா் 70 லட்சம் டாலா்களை இந்தியா வழங்கியது’ என்றாா்.
உலக அளவில் ஹிந்தியை ஊக்குவித்து பிரபலப்படுத்துவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவதற்காக கடந்த 2006-ஆம் ஆண்டு, ஜனவரி 10-ஆம் தேதி முதல் விஸ்வ ஹிந்தி திவாஸ் (உலக ஹிந்தி தினம்) ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஐ.நா. அறிக்கை: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பயங்கரவாத அமைப்புகள் தொடா்பான பகுப்பாய்வு ஆதரவு மற்றும் தடைகள் கண்காணிப்பு குழுவின் 35-ஆவது அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஐஎஸ், அல் கொய்தா போன்ற பயங்கரவாத குழுக்களால் இந்தியாவில் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்த முடியவில்லை; அதேநேரம், தற்கொலைப் படை தாக்குதல்களைத் தூண்டும் முயற்சிகளில் ஈடுபடுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.