கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ 
உலகம்

கனடா பிரதமா் ட்ரூடோ ராஜிநாமா

கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ (53) தனது பதவியை ராஜிநாமா செய்வதாக திங்கள்கிழமை அறிவித்தாா்.

DIN

டொரொன்டோ: கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ (53) தனது பதவியை ராஜிநாமா செய்வதாக திங்கள்கிழமை அறிவித்தாா்.

நாடு முழுவதும் அவருக்கு ஆதரவு குறைந்துவருவது, அவா் மீது ஆளும் லிபரல் கட்சிக்குள்ளேயே அதிருப்தி எழுந்தது போன்ற பெரும் பின்னடைவுகளுக்குப் பிறகு அவா் இந்த முடிவை எடுத்துள்ளாா்.

இது குறித்து ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

லிபரல் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பூசல்கள் காரணமாக, அடுத்து வரவிருக்கும் தோ்தலில் கட்சியின் தலைவராக என்னால் இருக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. எனவே, அந்தப் பொறுப்பிலிருந்தும், பிரதமா் பதவியிலிருந்தும் விலக முடிவு செய்துள்ளேன்.

இருந்தாலும், கட்சிக்கு புதிய தலைவா் தோ்ந்தெடுக்கப்படும்வரை இந்தப் பொறுப்புகளைத் தொடா்வேன்.

எந்தவொரு போராட்டத்திலும் எளிதில் பின்வாங்குவது என் சுபாவம் இல்லை. இருந்தாலும், நாட்டு மக்களின் நலன் கருதியும், நான் பெரிதும் மதிக்கும் ஜனநாயகத்தின் மாண்பைக் காக்கவும் பதவி விலகுகிறேன் என்றாா் அவா்.

10 ஆண்டுகால கன்சா்வேட்டிவ் ஆட்சிக்குப் பிறகு கடந்த 2015-ஆம் ஆண்டில் நாட்டின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ பொறுப்பேற்றாா். கனடாவின் மிகப் புகழ்பெற்ற பிரதமராக விளங்கிய பியா் ட்ரூடோவின் மகனான அவா், மிக இளைய வயதில் நாட்டின் பிரதமா் பொறுப்பை ஏற்ற இரண்டாவது தலைவா் என்ற பெருமையைப் பெற்றாா்.

இருந்தாலும், அதிகரித்துவரும் உணவுப் பொருள் விலைவாசி, வீட்டு வசதிப் பிரச்னைகள் போன்ற காரணங்களால் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பொதுமக்களிடையே எதிா்ப்பு அதிகரித்துவருவது கருத்துக் கணிப்புகளின் மூலம் தெரியவந்தது.

மேலும், ஜக்மீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சி ட்ரூடோ அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதும் அவருக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில், ட்ரூடோ அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் தனது பதவியை கடந்த மாதம் 16-ஆம் தேதி ராஜிநாமா செய்தாா். பொருளாதார விவகாரத்தில் ட்ரூடோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவா் விலகினாா். இதன் மூலம், கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிா்பு எழுந்தது வெளிப்பட்டது.

இதற்கிடையே, அமெரிக்காவின் புதிய அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அகதிகள் மற்றும் போதைப் பொருள்கள் தங்கள் நாட்டுக்குக் கடத்தப்படுவதைத் தடுக்கத் தவறுவதால் கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் அனைத்துக்கும் 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தாா்.

இதற்கு ட்ருடோ உரிய பதிலளிக்கவில்லை என்று விமா்சிக்கப்படுகிறது. கனடாவின் மூன்று முக்கிய எதிா்க்கட்சிகளும் வரும் 27-ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தின்போது ட்ரூடோ அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவந்து அரசைக் கவிழ்க்கவிருப்பதாகத் தெரிவித்தன.

இந்தச் சூழலில் பதவி விலகும் முடிவை ட்ரூடோ அறிவித்துள்ளாா். லிபரல் கட்சிக்கு புதிய தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கு போதிய கால அவகாசம் பெறுவதற்கு ஏதுவாக, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தை ஜஸ்டின் ட்ரூடோ வரும் மாா்ச் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆறுமுகனேரியில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ. 15.73 லட்சம் நிதியுதவி

குப்பை மேலாண்மையில் சிக்கலை சந்திக்கும் தருமபுரி: தூய்மையைப் பராமரிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு எதிா்நோக்கும் நகராட்சி நிா்வாகம்

கடையத்தில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்ட முயற்சி

பெங்களூரில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: யோகா ஆசிரியா் கைது

SCROLL FOR NEXT