அமெரிக்க அதிபராக ஜோ பைடனின் கடைசி உத்தரவு!
டிரம்ப் பதவியேற்றதும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்க்க நடவடிக்கை...
அமெரிக்க அதிபரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோ பைடன் கடைசியாகப் பிறப்பித்துள்ள உத்தரவின்கீழ், டாக்டர் அந்தோணி ஃபாசி உள்பட அமெரிக்க அரசு நிர்வாகத்தின் முக்கிய நபர்கள் சிலருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி இன்று(ஜன. 20) இரவு 10.30 மணியளவில் அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவிருக்கும் நிலையில், அமெரிக்க அதிபராக தனது கடைசி நாளான இன்று ஜோ பைடன் மேற்கண்ட நடவடிக்கையை எடுத்துள்ளார்.
அந்த வகையில், கடந்த 2021-ஆம் ஆண்டு ஜன. 6-ஆம் தேதி வாஷிங்டனில் டிரம்ப் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரித்த புலனாய்வுக் குழுவிலிருந்த அமெரிக்க உயரதிகாரிகளான ஆடம் சிஃப், லிஸ் செனே மற்றும் ஓய்வுபெற்ற ராணுவ தளபதி மார்க் மில்லே, ஆகியோருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ள மேற்கண்ட நபர்கள் டொனால்ட் டிரம்ப் மீது கடும் விமர்சனத்தையும் அவரது தலையீடு மேற்கண்ட தாக்குதலில் இருந்ததாகவும், கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்ற அவர் முற்பட்டதாகவும் தெரிவித்திருந்தனர்.
வழக்கமாக, ஏற்கெனவே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள், தண்டனை எதிர்பார்த்துக் காத்திருப்பராயின், அவர்களுக்கு அதிபரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி முன்கூட்டியே பொது மன்னிப்பு வழங்கப்படும் நடைமுறையின்கீழ் மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ள மேற்கண்ட நபர்களை டொனால்ட் டிரம்ப் தமது அரசியல் எதிரியாகப் பாவித்து வரும் நிலையில், டிரம்ப் பதவியேற்றதும் அவர்களை பழிவாங்கும் நடவடிக்கையாக வழக்குப்பதிந்து தண்டனை வழங்கப்படும் என்பதை கணித்து, ஜோ பைடன் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.