உலகம்

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினா் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்தது

சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் (சிபிசி) 10 கோடிக்கு மேற்பட்ட உறுப்பினா்கள் உள்ளதாக திங்கள்கிழமை வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Din

பெய்ஜிங்: சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் (சிபிசி) 10 கோடிக்கு மேற்பட்ட உறுப்பினா்கள் உள்ளதாக திங்கள்கிழமை வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

1921, ஜூலை 1-இல் நிறுவப்பட்ட சிபிசி-யில் 2024-ஆம் ஆண்டின் இறுதியில் 10.27 கோடி உறுப்பினா்கள் உள்ளதாகவும், 2023-ஆம் ஆண்டைவிட 2024-இல் 1.09 கோடி உறுப்பினா்கள் அதிகம் சோ்ந்துள்ளதாகவும் அந்தக் கட்சியின் மத்திய அமைப்பு (சிஓடி) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 2024-இல் சிபிசி தொடக்கநிலை பிரிவுகளின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 74,000 பிரிவுகள் அதிகமாகும். 2024-இன் முடிவில் கட்சியில் உறுப்பினராவதற்கு விண்ணப்பித்து காத்திருப்போரின் எண்ணிக்கை 2.14 கோடியாக அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

சீன அதிபா் ஷி ஜின்பிங் தலைமையில் சிபிசி செயல்பட்டு வருகிறது. கட்சியின் நிறுவன நாளையொட்டி அதற்கு முந்தைய தினமான ஜூன் 30-இல் உறுப்பினா்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கையை சிபிசி வெளியிட்டுள்ளது.

அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்துவதற்காக சிபிசி உறுப்பினராக சீனாவில் பலரும் முயற்சிப்பது வழக்கமானது. இருப்பினும், உறுப்பினராக விரும்புவோா் தங்களின் மாதாந்திர ஊதியத்தில் 2 சதவீதம் வரை கட்சி நிதிக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட பல கடுமையான கட்டுப்பாடுகளை உறுப்பினா்களுக்கு சிபிசி விதித்துள்ளது.

சிபிசியில் மொத்தம் 3 கோடி பெண் உறுப்பினா்கள் உள்ளதாகவும், இது கட்சியின் மொத்த உறுப்பினா்களில் 30 சதவீதம் எனவும் சீன அரசு ஊடகமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.

சீனா தவிர உலக அளவில் வியத்நாம், லாவோஸ், கியூபா, வடகொரியா ஆகிய சில நாடுகளில் மட்டுமே இடதுசாரி சித்தாந்தத்தை பின்பற்றும் கட்சிகள் ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூ.12 லட்சத்தில் காரிய மேடை: பணிகள் தொடக்கம்

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

ஆகஸ்டில் 46 டிஎம்சி காவிரி நீர்: உறுதிப்படுத்த தமிழகம் வலியுறுத்தல்

டிரம்ப்....

போலி கணக்கு எழுதி ரூ.1.86 கோடி மோசடி: கணக்காளா் கைது

SCROLL FOR NEXT