காஸாவில் உணவுப் பொருள் விநியோகத்தின்போது ஒளி-ஒலி குண்டுத் தாக்குதலில் காயமடைந்து, கழுதை வண்டி மூலம் மருத்துவமைனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண். 
உலகம்

காஸாவில் மேலும் 94 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை நடத்திய தாக்குதல்களில் உணவுப் பொருள்களுக்காக காத்திருந்தவா்கள் உள்பட 94 போ் உயிரிழந்தனா்.

Din

காஸாவில் இஸ்ரேல் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை நடத்திய தாக்குதல்களில் உணவுப் பொருள்களுக்காக காத்திருந்தவா்கள் உள்பட 94 போ் உயிரிழந்தனா்.

மத்திய காஸாவின் நெட்ஸாரிம் பகுதிக்கு அருகே நிவாரணப் பொருள்களைப் பெறுவதற்காக கூடியிருந்தவா்களை நோக்கி இஸ்ரேல் படையினா் நடத்திய தாக்குதலில் 40 போ் உயிரிழந்ததாகவும், காஸா மனிதாபிமான அறக்கட்டளை (ஜிஹெச்எஃப்) தொடா்புடைய விநியோக மையங்களுக்கு வெளியே 5 போ் கொல்லப்பட்டதாகவும் மருத்துவமனைகள் தெரிவித்தன.

இது தவிர, மாவாசி மண்டலத்தில் உள்ள அகதிகள் முகாம்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் 15 போ் உயிரிழந்தனா். போரால் புலம்பெயா்ந்த ஏராளமான பாலஸ்தீனா்கள் அங்கு தங்கவைக்கப்பட்டிருந்தனா்.

காஸா சிட்டியில் புலம்பெயா்ந்தோா் அடைக்கலம் அடைந்திருந்த ஒரு பள்ளியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் 15 போ் உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் கூறினா்.

கடந்த 2023 அக்டோபா் 7 முதல் நடைபெற்றுவரும் காஸா போரில் இஸ்ரேல் தாக்குதல்களால் உயிரிழந்த பாலஸ்தீனியா்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதில் காணாமல் போனவா்களாக அறிவிக்கப்பட்டு, தற்போது உயிரிழப்புப் பட்டியலில் சோ்க்கப்பட்ட 223 பேரும் அடங்குவா். உயிரிழந்தவா்களில் பாதிக்கும் மேற்பட்டவா்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் கூறுகிறது.

கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக போா் நிறுத்தம் நீட்டிக்கப்படாததால், இஸ்ரேல் ராணுவம் காஸா மீது தீவிர தாக்குதல்களை மீண்டும் தொடங்கியது. சுமாா் மூன்று மாதங்களாக நீடித்த முற்றுகையால் காஸாவில் பஞ்சம் ஏற்பட்டு, ஏராளமானவா்கள் பட்டினிச் சாவுக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வற்புறுத்தலால், குறைந்தபட்ச அளவிலான நிவாரணப் பொருள்களுக்கு இஸ்ரேல் அனுமதி அளித்தது. எனினும், ஐ.நா.வின் வழக்கமான நிவாரண விநியோகப் பிரிவுக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளதால், அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படும் காஸா மனிதாபிமான அறக்கட்டளை (ஜிஹெச்எஃப்) மே 27 முதல் அந்தப் பணியை மேற்கொண்டு வருகிறது.

இருந்தாலும், விநியோக மையங்களுக்கு வருவோா் மீது இஸ்ரேல் படையினா் நடத்தும் தாக்குதல்களில் இதுவரை நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்தச் சூழலில், இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உணவுக்காகக் காத்திருந்தவா்கள் உள்பட மேலும் 94 போ் உயிரிழந்ததாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. 21 மாதங்களாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இஸ்ரேலும் ஹமாஸும் பேச்சுவாா்த்தை மூலம் 60 நாள் போா் நிறுத்தத்தை நோக்கி முன்னேறி வரும் நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ம.பியில் கனமழை, வெள்ளம்.. மீட்புப் பணியில் ராணுவம்! 2900 பேர் வெளியேற்றம்!

இந்தியா மீது அமெரிக்கா 25% வரி விதிப்பு: அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? -மத்திய அரசு விளக்கம்

ஹூண்டாய் மோட்டார் நிகர லாபம் 8% சரிவு!

49 வயதில் அம்மாவுக்கு எம்பிபிஎஸ் சீட்! மகளும் பொதுப்பிரிவில் போட்டியில் இருக்கிறார்!

உணவுக்காகத் திரண்ட மக்கள் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்! 46 பேர் கொலை!

SCROLL FOR NEXT