பிரேசிலுக்கு 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறார். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு அதிக இறக்குமதி விதித்து டிரம்ப் உத்தரவிட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 1 வரை அமலுக்கு இடைக்கால தடை விதித்துள்ளார்.
இந்த நிலையில், பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கடிதம் அனுப்பியுள்ளார்.
வரி விதிப்பு ஏன்?
பிரேசில் முன்னாள் அதிபரும் வலதுசாரியாளருமான போல்சனாரோவுக்கு எதிராக நடைபெறும் வழக்கை மேற்கோள்காட்டி டிரம்ப் வரி விதித்துள்ளார்.
கடந்த அதிபர் தேர்தலின்போது மோசடி செய்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள நினைத்ததாக போல்சனாரோ மீது பிரேசில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றன.
இந்த வழக்கின் விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், பிரேசிலுக்கு ஆகஸ்ட் 1 முதல் 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் லூலாவுக்கு எழுதிய கடிதத்தை பகிர்ந்து, ”போல்சனோரோவுக்கு எதிரான விசாரணை நடக்கக்கூடாது, உடனடியாக முடிவுக்கு வரவேண்டும்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சில்வா பதில்
அமெரிக்க அதிபர் டிரம்பின் கடிதத்துக்கு பதிலளித்துள்ள லூலா எக்ஸ் தளத்தில் தெரிவித்ததாவது:
”பிரேசில் சுதந்திரமான விசாரணை நிறுவனங்களுடைய இறையாண்மை கொண்ட நாடு. அது எவ்வித சமரசத்தையும் ஏற்காது.
ஆட்சி கவிழ்ப்பைத் திட்டமிட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கை பிரேசிலின் நீதித்துறை அதிகார வரம்புக்குள் மட்டுமே வருகின்றன. நீதித்துறை சுதந்தரமாக செயல்படக்கூடியவை. எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் உட்பட்டவை அல்ல.
பிரேசிலில் கருத்து சுதந்திர ஆக்கிரமிப்பு மற்றும் வன்முறை நடைமுறைகள் எடுபடாது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்து பிரேசில் சட்டத்துக்கு உட்பட வேண்டும்.
அமெரிக்காவுடன் கடந்த 15 ஆண்டுகளில் 410 பில்லியன் டாலர் வர்த்தகத்தை பிரேசில் மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க அரசின் புள்ளிவிவரங்களே காட்டுகின்றன. வரி அதிகரிப்பை பிரேசிலின் பொருளாதார சட்டத்தின்படி எதிர்கொள்ளப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.