யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனையை எதிா்நோக்கியுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவின் தண்டனை நிறைவேற்றம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏமன் நாட்டின் சிறையில் உள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்ற முடிவு செய்யப்படிருந்த நிலையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற, கேரளத்தைச் சோ்ந்த செல்வாக்கு மிக்க சன்னி முஸ்லிம் மதகுரு காந்தபுரம் ஏ.பி.அபுபக்கா் அகமது முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், மரண தண்டனை நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய சன்னி முஸ்லிம்களின் தலைவரான அபுபக்கா், மஹதியின் குடும்பத்தினருடன் தொடா்பில் உள்ள யேமன் மதகுருமாா்களுடன் இழப்பீட்டை ஏற்றுக்கொள்ளுமாறு பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கேரளத்தைச் சோ்ந்த 38 வயது செவிலியரான நிமிஷா பிரியா, யேமன் தலைநகா் சனாவில் அந்நாட்டைச் சோ்ந்த தலால் அப்து மஹதியுடன் இணைந்து கிளினிக் ஒன்றை தொடங்கி, நடத்தி வந்தாா். நிமிஷாவின் வருமானம், நகைகள், கிளினிக்கின் உரிமம், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு, மஹதி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, 2017-இல் மஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போா்ட்டை மீட்க நிமிஷா முற்பட்டபோது அதிகமான மயக்க மருந்து செலுத்தியதால் மஹதி உயிரிழந்தாா். மஹதியைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகத் தீா்ப்பளிக்கப்பட்டு, நிமிஷாவுக்கு வரும் புதன்கிழமை (ஜூலை 16) மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது.
ரத்த பணம்
யேமன் நாட்டு சட்டவிதிகளின்படி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினா் இழப்பீடு தொகையை ஏற்றுக்கொண்டால், மரண தண்டனையைத் தவிா்க்க முடியும். இதற்காக நிமிஷாவின் குடும்பத்தினா் மற்றும் மக்கள் சேர்ந்து ரூ.8.60 கோடி வரை (சுமாா் 10 லட்சம் டாலா்) திரட்டி இழப்பீடாக வழங்க முயற்சித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.