ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தாத, ஒய்சிடி-529 என்ற ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை, முதற்கட்ட பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடலில் விட்டமின் ஏ -வை தடுப்பதன் மூலம் விந்நணு உருவாவதை தற்காலிகமாக நிறுத்தும் வகையில் இந்த மாத்திரை தயாரிக்கப்பட்டுள்ளது.
இது மனிதர்களுக்குக் கொடுத்து பாதுகாப்பான முறையில் சோதனை நடத்தப்பட்டது. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது.
கருத்தடை என்ற விஷயம் கையில் எடுக்கப்பட்டாலே, முதலில் பெண்களுக்கானது என்பதுதான். பெண்களின் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள், கருவுறுதலைத் தடுக்கும் கருவிகள், ஊசிகள் என அனைத்தும் வந்துவிட்டது. இது பல பத்தாண்டு காலமாகவே இருந்து வருகிறது. ஆனால், இனி அந்த நிலை இருக்காது. தற்போது, ஆண்களுக்கு என கருத்தடை மாத்திரை புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மிகவும் புதிய வகையில் செயல்படும் இந்த மாத்திரை, ஆய்வக சோதனைகளை முடித்துவிட்டு, மனிதர்களுக்கும் கொடுத்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.
ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தாமல், வாய் வழியாக எடுத்துக் கொள்ளும் இந்த மாத்திரைகள், விந்தணு உருவாவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இது மனிதர்களுக்கு எந்த தீங்கும் செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் கம்யூனிகேஷன்ஸ் மெடிசின் என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஒய்சிடி - 529 என்ற இந்த மாத்திரை, விட்டமின் ஏவை தடுத்து, விந்தணு உருவாக்கத்துக்கு தடை ஏற்படுத்தும் வகையில் இந்த மாத்திரை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மாத்திரை, விந்தணுவை எந்தளவுக்குக் குறைக்கிறது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ள மருத்துவமனைகளில் பதிவு செய்திருந்த 32 வயது முதல் 59 வயதுடைய 16 நல்ல உடல்நலத்துடன் இருக்கும் ஆண்கள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இவர்களை இரு குழுவாகப் பிரித்து அவர்களுக்கு வெவ்வேறு அளவுகள் மற்றும் கால இடைவெளியில் இந்த மருந்து கொடுத்து பரிசோதிக்கப்பட்டது. சிலர் சாப்பிடுவதற்கு முன்பு, சிலருக்கு சாப்பிட்ட பிறகும் மாத்திரை கொடுக்கப்பட்டது. சாப்பிடும் உணவில் இருக்கும் கொழுப்பு, கலோரிகள் மாத்திரையின் செயல்பாட்டை பாதிக்குமா என்பதை அறியும் வகையில் இது செய்யப்பட்டது.
இது பரிசோதனைகளில் வெற்றிபெற்று, அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், விரைவில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.