காஸாவில் கடந்த 72 மணி நேரத்தில் உணவு பற்றாக்குறை காரணமாக 21 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அங்குள்ள மருத்துவமனை கூறியுள்ளது.
பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி அங்குள்ள 251 பேரைப் பணயக் கைதிகளாக கைது செய்ததில் இருந்து அங்கு போா் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் மடிந்து வருகின்றனர்.
மேலும், தற்போது காஸாவில் உணவு தேடி, உணவு மையங்களை நோக்கிச் செல்லும் குழந்தைகள் உள்பட அங்குள்ள மக்களை இஸ்ரேல் ராணுவத்தினர் இரக்கமின்றி சுட்டு வீழ்த்துகின்றனர். மேலும் காஸாவுக்கு உணவு பொருள்கள் செல்வதற்கும் அனுமதி வழங்குவதில்லை. இதனால் அங்குள்ள மக்கள் போதிய உணவு கிடைக்காமல் பட்டினியால் செத்து வருகின்றனர்.
அங்கு மருத்துவம், இன்குபேட்டர் உள்ளிட்ட வசதிகள் இன்றியும் குழந்தைகள் உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில் காஸாவில் கடந்த 72 மணி நேரத்தில் பட்டினியால் 21 குழந்தைகள் இறந்துள்ளதாக காசா நகரத்தில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையின் தலைவர் தெரிவித்தார்.
அங்குள்ள 3 மருத்துவமனைகளில் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் உணவு, மருத்துவப் பொருள்கள் மட்டுமின்றி ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகளிடையே இறப்பு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதுவரை உணவுக்காக காத்திருந்த உணவு தேடிச் சென்ற குழந்தைகள் உள்பட பாலஸ்தீனியர்கள் 1,000-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
மக்கள் பட்டினியால் தவித்து வருவதால் ஐ.நா. மூலமாக மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் பேரழிவைத் தடுக்க இஸ்ரேல் அரசு உடனடி பேச்சுவாா்த்தை மூலம் நிரந்தரப் போா்நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.