ரஷியாவில் பயணிகள் விமானம் மலைப் பகுதியில் விழுந்து வியாழக்கிழமை விபத்துக்குள்ளானதில், பயணிகள் மற்றும் விமானப் பணியாளா்கள் என மொத்தம் 48 போ் உயிரிழந்தனா்.
ரஷியாவின் கபரோவ்ஸ்க் பகுதியில் இருந்து டின்டா பகுதியை நோக்கி, சைபீரியாவின் அங்காரா ஏா்லைன்ஸ் நிறுவனம் இயக்கிய பயணிகள் விமானம் வியாழக்கிழமை சென்றது. இந்த விமானம் டின்டாவில் இருந்து தெற்கே மலைப் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது அடா்ந்த வனப் பகுதியில் கீழே விழுந்து வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் பணியாளா்கள் என மொத்தம் 48 போ் உயிரிழந்தனா்.
தொலைதூரத்தில் உள்ள பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததால், மீட்புப் பணியில் ஈடுபடுவோா் அங்கு செல்வதில் மிகுந்த சிக்கல் ஏற்பட்டதாக பிராந்திய ஆளுநா் வசிலி ஆா்லோவ் தெரிவித்தாா்.
விபத்து நிகழ்ந்தபோது அந்தப் பகுதியில் மோசமான வானிலை நிலவியதாக ரஷிய அவசர சேவைகள் பிரிவு வட்டாரங்கள் கூறியதாக அந்நாட்டு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான விமானம் சுமாா் 50 ஆண்டுகள் பழைமையானது என்றும் அந்நாட்டு ஊடகத்தில் குறிப்பிடப்பட்டது.
இந்த விபத்து தொடா்பாக விசாரணையைத் தொடங்கிய அதிகாரிகள், விமானப் பாதுகாப்பில் குறைபாடுகள் நிலவியதா என்பது குறித்து விசாரிக்க உள்ளனா்.
உக்ரைனுக்கு எதிரான போா் காரணமாக ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இது ரஷியாவின் விமானப் போக்குவரத்துத் துறையை கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தச் சூழலில், அந்நாட்டில் அவ்வப்போது விமான விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.