செய்யறிவின் (செயற்கை நுண்ணறிவின்) மேம்பாடு மற்றும் வளர்ச்சியினால் ஏற்படவிருக்கம் மிக பயங்கர ஆபத்துகளை மென்பொருள் நிறுவனங்கள் மறைப்பதாக செய்யறிவின் தந்தை (காட்ஃபாதர் ஆஃப் ஏஐ) என அழைக்கப்படும் ஜெஃப்ரி ஷிண்டன் எச்சரித்துள்ளார்.
ஒன் டெசிஷன் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய ஹிண்டன், பெரு நிறுவனங்களின் தலைவர்கள், வளர்ந்து வரும் செய்யறிவினால் ஏற்படவிருக்கும் மிகப் பயங்கர ஆபத்துகளைக் கண்டும் காணாமல் இருப்பதாகவும், மூடிய கதவுகளுக்குள் அவற்றைப் பற்றி அவர்கள் நன்கு அறிந்து உணர்ந்திருந்தாலும் தொடர்ந்து மறைத்துவருகிறார்கள் என்று நேரடியாகவே குற்றம்சாட்டியிருக்கிறார்.
மிகப் பெரிய நிறுவனங்களில் இருப்பவர்கள், செய்யறிவு ஏற்படுத்தவிருக்கும் ஆபத்துகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதில்லை. டெமிஸ் போன்றவர்கள் மட்டுமே அதன் ஆபத்துகளை உணர்ந்து ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று ஹிண்டன் தெரிவித்துள்ளார்.
மேலும், செய்யறிவு அமைப்புகள் எவ்வாறு ஆபத்தான விகிதத்தில் பல்கிப் பெருகிவருகின்றன என்பதையும், ஆராய்ச்சியாளர்களால் கூட அதன் ஆபத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத வகையில் அது உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்யறிவு பல வேலைகளில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறது. ஆனால், இது எதிர்பார்த்த வேகத்தைக் காட்டிலும் அதிகம் என்று தெரிவித்துள்ளார்.
தன்னுடைய பணியின் ஆரம்ப காலத்தில், செய்யறிவு ஆபத்துகளை நான் முழுமையாக அறிந்துகொள்ளாமல் விட்டுவிட்டதை எண்ணி வருந்துவதாகவும் ஆனால் அதன் பிறகு என்ன நடக்கவிருக்கிறது என்ற அபாயத்தை அறிந்துகொண்டதாகவும் ஆனால், எதிர்கால ஆபத்து வெகு தொலைவில் இருப்பதாக நான் நினைத்திருந்தேன். அப்போதே, பாதுகாப்பைப் பற்றி விரைவில் யோசித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பத்தாண்டுகளுக்கும் மேலாக கூகுளில் பணியாற்றி வந்த ஹிண்டன் கடந்த 2023 ஆம் ஆண்டு பணியிலிருந்து வெளியேறினார். கூகுள், செய்யறிவை அதிகம் ஊக்கப்படுத்துவதை எதிர்த்துதான் அவர் பணியிலிருந்து வெளியேறியதாக அப்போது செய்திகள் வெளியாகின. ஆனால், அதனை இப்போதைய பேச்சு மூலம் முற்றிலும் உண்மையல்ல என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.
ஊடகங்கள் விரும்பும் ஒரு அற்புதமான கதை என்னிடம் உள்ளது, உண்மையைச் சொல்ல விரும்பிய இந்த நேர்மையான விஞ்ஞானி, அதனால்தான் அன்று கூகுளை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று என்று கூறப்பட்ட அனைத்தும் ஒரு கட்டுக்கதை," என்று அவர் கூறினார்.
"எனக்கு 75 வயது ஆகிவிட்டதால்தான் கூகுளை விட்டு வெளியேறினேன், இனி திறம்பட என்னால் புரோக்ராம் செய்ய முடியாது, ஆனால் நான் வெளியேறும்போது, இந்த அபாயங்கள் குறித்து என்னால் சுதந்திரமாகப் பேச முடியும்" என்று கருதினேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.