ஜம்மு - காஷ்மீர் இல்லாத, இந்தியாவின் தவறான வரைப்படத்தை இஸ்ரேல் ராணுவம் காட்சிப்படுத்தியதற்கு தற்போது மன்னிப்பு கேட்டுள்ளது.
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையில் போர்ப் பதற்றம் அதிகரித்து வருகின்றது. இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் அதன் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில், ஈரானின் ஏவுகணைகள் குறித்த வரைப்படத்தை இஸ்ரேல் ராணுவத்தினர் அவர்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தானின் பகுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்தப் பதிவுக்கு, சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்புகள் அதிகரித்து வந்த சூழலில், அந்நாட்டு ராணுவம் அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளது.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
“இந்தப் பதிவு, பகுதிகளைக் குறித்த படமாகும். இதில், எல்லைகளைத் துல்லியமாகக் காட்ட தவறிவிட்டது. இதற்கு, நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அந்தப் பதிவில் இதுவரை இந்திய வரைப்படமானது மாற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இத்துடன், இஸ்ரேலின் விமானப் படையும், இதேபோன்ற ஒரு வரைப்படத்தை பதிவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த வரைப்படத்தை நீக்க அல்லது சரி செய்யவேண்டுமென தான் வலியுறுத்தியுள்ளதாக, இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரியூவன் அஸார் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.