ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில் இஸ்ரேல், செளதி அரேபியாவின் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன.
இஸ்ரேலின் பங்குச் சந்தை குறியீடான டிஏ -35, 1.2% வரையிலும், செளதி அரேபியாவின் பங்குச் சந்தை குறியீடான தடாவுல் அல் குறியீடு 1% வரையிலும் அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் வங்கிகளின் பங்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக, இஸ்ரேலின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ஹபோலிம் தெரிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலே இதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதேபோன்று குவைத் நாட்டின் பங்குச் சந்தையான பெளர்சா 0.7%, மஸ்கட் பங்குச் சந்தையான எம்.எஸ்.எக்ஸ்-30 0.6%, கத்தார் பங்குச் சந்தை 0.7% அதிகரித்துள்ளன. (துபை நேரப்படி நண்பகல் 12 மணி நிலவரம்)
மத்திய கிழக்கு நாடுகளின் பங்குச் சந்தையானது போரை நுணுக்கமாக கவனித்து வருவதாகவும், மற்ற நாடுகளுக்கும் இந்த பதற்றம் பரவும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக துபையைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஹஸ்னாயின் மாலிக் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கான எந்த அறிகுறிகளும் இதுவரை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கச்சா எண்ணெய் போக்குவரத்து போன்றவற்றிற்கு ஈரான் மற்றும் அதன் ஆதரவு நாடுகள் இடையூறு ஏற்படுத்துவதன் மூலம், பங்குச் சந்தையில் குறுகிய கால இறக்கத்தை சந்திக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரான் - இஸ்ரேல் இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. அணுசக்தி உற்பத்தியை ஈரான் கைவிட வேண்டும் என இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் செயல்பட்டு வருகிறது.
இதனிடையே சனிக்கிழமை இரவு அதிசக்திவாய்ந்த குண்டுகளை பி -2 பாம்பர்ஸ் விமானங்கள் மூலம் ஈரானில் வீசியது அமெரிக்கா. ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த அணுசக்தி உற்பத்தி தளவாடங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது.
இஸ்ரேல் உடனான போரில் அமெரிக்கா தலையிட்டுள்ளதால், அமெரிக்கா தொடங்கி வைத்த போரை ஈரான் முடித்துவைக்குமென ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.
இதையும் படிக்க | ஈரான் மீது தாக்குதல்: அமெரிக்காவில் வீதிகளில் மக்கள் போராட்டம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.