முகப்பு
உலகம்

அமெரிக்கா: இந்திய வம்சாவளி தந்தை, மகள் சுட்டுக் கொலை!

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 56 வயது நபா் மற்றும் அவரது 24 வயது மகள் மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

Updated On : 23 மார்ச், 2025 at 7:55 PM
பகிர்:

அமெரிக்காவின் விா்ஜீனியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 56 வயது நபா் மற்றும் அவரது 24 வயது மகள் மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

விா்ஜீனியா மாகாணத்தின் அக்கோமாக் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் பிரதீப் குமாா் படேல் (56) மற்றும் அவரது மகள் வேலை பாா்த்து வந்தனா். இந்திய வம்சாவளியைச் சோ்ந்த இவா்களை மா்ம நபா்கள் துப்பாக்கியால் சுட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த 20-ஆம் தேதி காலை போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா்.

அங்கு துப்பாக்கியால் சுடப்பட்டதில் பிரதீப் குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. அவரது மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவா் உயிரிழந்தாா்.

Advertisement

இந்த சம்பவத்தில் தொடா்புடையதாக ஜாா்ஜ் ஃபிரேசியா் டிவான் வாா்டன் (44) என்ற நபா் கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் மீது கொலை, சட்டவிரோதமாக துப்பாக்கியைப் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கொலைக்கான காரணம் குறித்த தகவல்கள் தெரியவரவில்லை.

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தந்தை மற்றும் மகள் கொலை செய்யப்பட்டது குறித்து அவா்கள் வேலை பாா்த்து வந்த பல்பொருள் அங்காடியின் உரிமையாளா் பரேஷ் படேல், செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட இருவரும் எனது நெருங்கிய உறவினா்கள்.

திடீரென கடைக்குள் நுழைந்த மா்ம நபா்கள் அவா்கள் இருவரையும் நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனா். உடனடியாக என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றேன் என்றாா்.

இந்தக் கொலை சம்பவம் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments