அமெரிக்காவின் துணை அதிபர் உள்பட பாதுகாப்பு உயரதிகாரிகளைக் கொண்ட சிக்னல் செயலியின் குழுவில், ஒரு செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் சேர்க்கப்பட்டது எப்படி என்ற கேள்விதான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
யேமனில் ஹூதி கிளா்ச்சிப் படை தலைவா்கள் மற்றும் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திவரும் தாக்குதல் தொடா்பாக அந்த நாட்டின் துணை அதிபா் ஜே.டி. வான்ஸ், பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்சேத், வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்க்கோ ரூபியோ, தேசிய உளவு அமைப்பின் இயக்குநா் துளசி கப்பாா்ட், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக்கேல் வால்ட்ஸ் உள்ளிட்ட உச்சநிலை அமைச்சா்கள், பாதுகாப்பு உயரதிகாரிகள் ‘சிக்னல்’ என்ற தகவல் தொடா்பு செயலி மூலம் மேற்கொண்ட தகவல் பரிமாற்றம், துல்லியமாகக் கசிந்துள்ளது.
அதற்குக் காரணம், அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குழுவில், அமெரிக்காவின் ‘தி அட்லாண்டிக்’ இதழின் தலைமை ஆசிரியா் ஜெஃப்ரி கோல்பா்க், எதிர்பாராதவகையில் சேர்க்கப்பட்டிருந்ததும், இதனை அந்தக் குழுவில் இருந்த யாருமே கவனிக்காமல் இருந்துள்ளதும் ஆச்சரியத்தையும், கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
நம்ம ஊரில் பயன்படுத்தப்படும் ‘வாட்ஸ்ஆப்’ போன்றதுதான் சிக்னல் செயலி. அந்த செயலியில், அமெரிக்க உயா்நிலை அமைச்சா்கள், பாதுகாப்பு உயரதிகாரிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு மிகவும் ரகசியமான (இனி என்ன ரகசியம்?) ஒரு குழுவில் ஜெஃப்ரி கோல்பா்கும் தவறுதலாக சோ்க்கப்பட்டதுதான் இதற்குக் காரணம்.
இதில் வேடிக்கை என்னவென்றால், உரையாடிக் கொண்டிருப்போரின் பட்டியலில் அவரின் பெயா் இருப்பதை நாட்டின் துணை அதிபா் முதல் தேசிய உளவு அமைப்பின் தலைவா் வரை யாருமே கவனிக்காமல் சகட்டு மேனிக்கு ரகசியத் தகவல்களை அதுவும் ஒரு செய்தி நிறுவனத்துக்கே வாரி வழங்கியிருக்கிறார்கள்.
இதற்கு பெயர் கசிந்தது என்று எவ்வாறு சொல்ல முடியும் என்றுகூடத் தெரியவில்லை. நேரடியாக ஒரு ரகசியக் குழுவில் பத்திரிகையாளரைச் சேர்த்துவிட்டு பிறகு குழுவில் ராணுவ ரகசியங்களைப் பரிமாறிக்கொண்டால், அவர் என்ன ரகசியம் காக்க ராணுவ வீரரா? பத்திரிகையாளர். அவர் தனது வேலையை மிகக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்.
ராணுவ ரகசியம் கசிந்தது எப்படி என்று அமெரிக்காவில் எல்லோரும் அதிர்ச்சியடைந்திருக்கும் இந்த நிலையில்தான், ஜெஃப்ரி கோல்ட்பர்க் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு சிக்னல் செயலியின் முக்கிய செய்திகளை பரிமாறிக்கொள்ளும் குழுவில் எவ்வாறு சேர்க்கப்பட்டார் என்று அலசி ஆராயப்பட்டு வருகிறது.
கோல்ட்பர்க் இது பற்றி கூறுகையில், மார்ச் 11ஆம் தேதி, தனக்கு அறிமுகமில்லாத ஒரு சிக்னல் குழுவிலிருந்து இணையுமாறு அழைப்பு வந்தது. மைக்கேல் வால்ட்ச் என்பவர் பெயரில் வந்த அழைப்பை ஏற்ற நிலையில், ஒரு சில நாளக்ளுக்கு முன்பு யேமன் தொடர்பாக பேசிக்கொண்டிருந்த குழுவில் இணைக்கப்பட்டேன்.
இந்தக் குழுவில் டிரம்ப் இல்லை. ஆனாலும் அவருக்கு நெருக்கமானவர்கள் பலரும் இருந்தனர். முதலில், இது போலியான குழு அரட்டை என்றே நினைத்திருந்தேன். பிறகுதான் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்த பிறகு, உண்மை புரிந்தது என்றார்.
ராணுவ ரகசியம் கசிந்திருப்பதால், தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு அழுத்தம் அதிகரித்திருக்கிறது. செனட் அவையில் உள்ள ஜனநாயகக் கட்சியினர், உயர்நிலைக் குழு விசாரணைக்கு வலியுறுத்தியிருக்கிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபரிடம் கேட்டபோது, இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது, ஆனால், வால்ட்சுக்கு எனது முழு ஆதரவு உண்டு என்று மட்டும் பதிலளித்திருந்தார்.
இதற்கிடையே எந்த ராணுவ ரகசியமும் கசியவில்லை என்று பாதுகாப்புச் செயலர் விளக்கம் வேறு தனியாகக் கொடுத்துள்ளார். மேலும், போர்த் திட்டங்கள் குறித்து சிக்னல் செயலி மூலமாக யாரும் தகவல் பரிமாறிக்கொள்ளவில்லை என்றும் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.
அப்படி என்னதான் கசிந்தது?
அமெரிக்க ராணுவம், யேமனில் ஹூதி கிளா்ச்சிப் படை தலைவா்கள் மற்றும் நிலைகளைக் குறிவைத்து நடத்திவரும் தாக்குதல் தொடா்பாக உயர்நிலை அதிகாரிகள் பேசிக்கொண்டதுதான் அது.
‘மணி 11:44 - இதுதான் சரியான தருணம்; பருவநிலை சாதகமாக இருக்கிறது. தாக்குதல் நடவடிக்கையை சென்ட்காம் (ராணுவத்தின் மத்திய கட்டளையகம்) உறுதிசெய்துவிட்டது’
‘மணி 12:15 - எஃப்-16 போா் விமானங்கள் புறப்பட்டுவிட்டன’
‘மணி 13: 45 - எஃப்-18 விமானங்கள் இலக்குகளைத் தாக்கத் தொடங்கிவிட்டன. எம்க்யு-9 ட்ரோன்களும் ஏவப்படுகின்றன’
‘மணி 15:36 - எஃப்-18 விமானங்களின் இரண்டாவது அடுக்குத் தாக்குதல் தொடங்குகிறது. போா்க் கப்பலில் இருந்து டமாஹாக் ஏவுகணை ஏவப்படுகிறது’
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.