ஜெர்மனியின் ஹாம்பர்க் பகுதியில், ஒரு பெண் நடத்திய கத்திக் குத்துச் சம்பவத்தில் 18 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 39 வயதான ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்திருப்பதாகவும், ஹாம்பர்க் நகரில் உள்ள சென்ட்டிரல் ரயில் நிலையத்தில், இவர் தனி ஒருவராகவே இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
மிகப்பெரிய தேடுதல் நடவடிக்கையில்தான் அப்பெண் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்டிரல் ரயில் நிலையத்தில், திடீரென கத்தியால் பயணிகளை அப்பெண் குத்தியதில் 6 பேர் பலத்த காயமடைந்ததாகவும் 7 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தீயணைப்புத் துறை வீரர்கள் தெரிவித்துள்ளனர். சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் பல துறை அவசர கால மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. கத்திக் குத்து சம்பவத்தில் ஈடுபட்ட பெண், ஏதேனும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவரா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது.
இது குறித்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ஹாம்பர்க் காவல்துறை, தாக்குதல் நடத்தியவர் "ஆக்ரோஷமாகவும் கண்மூடித்தனமாகவும் பயணிகள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார். அவர் கண்ணில் பட்டவர்களை எல்லாம் கத்தியால் குத்தியிருக்கிறார். அவர்களில் சிலரை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பெண்ணின் பின்னணி மற்றும், எந்தச் சூழ்நிலையில் இந்தக் குற்றத்தை அவர் செய்துள்ளார் என்பதும் தெரியவரவில்லை. மிகத் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் ஹாம்பர்க் சென்டிரல் ரயில் நிலையமானது, வழக்கமாக அதிகப் பயணிகள் வந்து செல்லும் ரயில்நிலையங்களில் முக்கியமானதாகும். ஒரு நாளைக்கு 5.50 லட்சம் பயணிகள் இந்த ரயில் நிலையத்தைப் பயன்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலமாக ஜெர்மனியில் நடைபெற்று வரும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள், மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.