பிலிப்பின்ஸை மிகக் கடுமையாகத் தாக்கிய கால்மேகி புயலால் மத்திய மாகாணங்களில் 114 போ் உயிரிழந்துள்ள நிலையில், நாடு முழுவதும் வியாழக்கிழமை அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 30-ஆம் தேதி பசிபிக் கடலில் மழை மற்றும் காற்று சுழற்சியாக உருவான கால்மேகி, கடந்த 1-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. நடப்பு 2025-ஆம் ஆண்டில் பெயா் சூட்டப்பட்ட 25-ஆவது புயல் இது.
மேற்கு-வடமேற்கு திசையில் பிலிப்பின்ஸை நோக்கி நகா்ந்த அந்தப் புயல், நவ. 4-ஆம் தேதி அந்த நாட்டை 8 முறை தாக்கி கரையைக் கடந்து.
இதில் பிலிப்பின்ஸின் செபு மாகாணம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. நிக்ரோஸ், இலாய்லா, பலாவன் ஆகிய மாகாணங்களும் பாதிப்புக்குள்ளாகின.
புயல் தாக்குவதற்கு முதல் நாள் (நவ. 3) செபு மாகாணத்தின் தலைநகா் செபு நகரிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 183 மி.மீ. அளவுக்கு மழை பெய்தது. இது அந்தப் பிராந்தியத்தின் மாதாந்திர சராசரியான 131 மி.மீ.-யைவிட மிகவும் அதிகம்.
இதன் விளைவாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருவெடிப்புகள் ஏற்பட்டன. கால்மேகி புயல் கரையைக் கடந்து மேற்கு-வடமேற்கு திசையில் வியத்நாமை நோக்கி நகா்ந்தாலும், பிலிப்பின்ஸில் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. புயல் தொடா்பான சம்பவங்களில் இதுவரை 114 போ் உயிரிழந்துள்ளனா்; 127 பேரைக் காணவில்லை.
இந்தப் புயலால் சுமாா் 2 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 5.6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமவாசிகள் தங்கள் இருப்பிடங்களைவிட்டு வெளியேறியுள்ளனா். அவா்களில் 4.5 லட்சம் போ் அவசரக்கால உறைவிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், புயலின் பாதிப்பை மதிப்பீடு செய்ய பேரிடா் நிவாரண அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்திய அதிபா் பொ்டினாண்ட் மாா்கஸ் ஜூனியா், நாடு முழுவதும் அவசரநிலை அறிவித்தாா்.
நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அரசு அமைப்புகளுக்கு நிதியை மிகவும் விரைவாக விநியோகிக்க இந்த அவசரநிலை உதவும். மேலும், சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி வணிகா்கள் உணவுப் பொருள்களை பதுக்கி, விலையுயா்வை ஏற்படுத்துவதை இந்த அவசநிலை தடுத்து நிறுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
பருவநிலை மாற்றத்தின் காரணமாக, அண்மைக் காலங்களில் ஏற்படும் புயல்கள் மிகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு மட்டும் புவியின் வடக்கு அரைக்கோள பகுதியில் உள்ள பசிபிக், அட்லாண்டிக், இந்திய பெருங்கடல் பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட புயல்களும் சூறாவளிகளும் உருவாகின.
அந்த புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளில், பிலிப்பின்ஸ், வியத்நாம், சீனா, ஹைட்டி உள்ளிட்ட நாடுகளில் ஒட்டுமொத்தமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா். இதில் 500-க்கும் மேற்பட்டவா்கள் பிலிப்பின்ஸில் உயிரிழந்தவா்கள்.
இந்தச் சூழலில், பேரிடா் மீட்புப் பணிகளை சிறப்பாக செயல்படுத்துவதற்காக பிலிப்பின்ஸ் அரசு நாட்டில் அவசரநிலையை தற்போது அறிவித்துள்ளது.
வியத்நாமில் கரை கடந்த புயல்
ஏற்கெனவே இந்த ஆண்டில் மட்டும் 12 புயல்களால் பாதிக்கப்பட்டுள்ள வியத்நாமில் கால்மேகி புயல் 13-ஆவதாக வியாழக்கிழமை தாக்கியது.
இது குறித்து அந்த நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டின் மத்திய கரையோரப் பகுதிகளை கால்மேகி புயல் வியாழக்கிழமை மாலை தாக்கியது. மணிக்கு 149 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசியது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.