தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிகாரிகள் பங்கேற்கமாட்டார்கள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா நாட்டில், ஆப்பிரிக்கானர்ஸ் எனும் சிறுபான்மை வெள்ளையினருக்கு எதிராக அந்நாட்டின் அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றார். இந்தக் குற்றச்சாட்டுக்களை தென்னாப்பிரிக்க அரசு மறுத்துள்ளது.
இருப்பினும், பல்வேறு முக்கிய பொருளாதார நாடுகள் இடம்பெற்ற அமைப்பில், தென்னாப்பிரிக்கா இடம்பெற்றுள்ளது குறித்து கடந்த சில நாள்களுக்கு முன்பு கேள்வி எழுப்பிய அதிபர் டிரம்ப், நவம்பர் மாதம் இறுதியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கபோவதில்லை எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அரசின் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கமாட்டார்கள் என நேற்று (நவ. 7) மீண்டும் உறுதியாகக் கூறியுள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறப்பட்டதாவது:
“ஜி20 உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவில் நடைபெறுவது மிகப் பெரிய அவமானம். அங்குள்ள ஆப்பிரிக்கானர்ஸ் படுகொலை செய்யப்பட்டு, அவர்களது நிலங்களும் பண்ணைகளும் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றப்படுகின்றன.
இந்த மனித உரிமை மீறல்கள் தொடரும் வரை எந்தவொரு அமெரிக்க அதிகாரிகளும் மாநாட்டில் பங்கேற்கமாட்டார்கள். 2026 ஆம் ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டை அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டு வருகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆகப் பதிவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.