காஸாவில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்டது... தற்போது காஸாவில் மக்களின் நிலை என்ன?
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 2023 அக். 7ல் தொடங்கிய போர், 2 ஆண்டுகளைக் கடந்த நிலையில், கடந்த மாதம் அக். 10 ஆம் தேதி முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 20 அம்ச திட்டத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் ஒப்புக்கொண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின்போது இரு தரப்பிலும் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. பிணைக் கைதிகளை விடுவிப்பது இஸ்ரேலின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.
ஹமாஸ் தரப்பில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், குறிப்பாக காஸா மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகள் உடனடியாக கிடைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. இதற்கு இஸ்ரேலும் ஒப்புக்கொண்டது. ஏனெனில் இஸ்ரேலின் தாக்குதலில் காஸா நகரம் முற்றிலும் சிதைந்து போயிருந்தது. அங்கு மக்கள் பசியால் செத்துக்கொண்டிருந்தனர். காஸாவுக்கு வரும் மனிதாபிமான உதவிகளைக்கூட இஸ்ரேல் தடுத்தது.
இந்நிலையில் போர் நிறுத்தம், காஸா நகர மக்களுக்கு ஆறுதல் அளித்தாலும் அவர்களின் வாழ்க்கை நிலை என்னவோ அப்படியேதான் இருக்கிறது.
போர் நிறுத்தத்திற்குப் பிறகும் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. போர் நிறுத்தத்திற்குப் பிறகு அங்கு 241 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர், 619 பேர் காயமடைந்துள்ளனர். போர் தொடங்கியதில் இருந்து உயிரிழப்பு 69,000-யைக் கடந்துள்ளது.
ஹமாஸ் உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளையும் இறந்த 24 பேரின் உடல்களையும் இதுவரை ஒப்படைத்துள்ளது.
இஸ்ரேல் தரப்பில் சிறையில் இருந்து 2,000 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று(நவ. 10) இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் ஒருவர் கொல்லப்பட்டார்.
மேலும், காஸாவில் ஒரு பகுதியில் இஸ்ரேல் படையினர் கட்டடங்களை இடித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக ஹமாஸ் குற்றம் சாட்டுகிறது. அதேநேரத்தில் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸின் நடவடிக்கைகளுக்கு பதிலளிப்பதாகக் கூறுகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய 600 லாரிகள் தினமும் காஸாவுக்கு வரும் என்று இஸ்ரேல் உதியளித்த நிலையில் தற்போது 200 லாரிகள்தான் வருவதாகவும் பிற வணிக லாரிகளும் வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
முற்றிலும் வாழ்க்கைத் தரம், பொருளாதாரம் ஆகியவற்றை இழந்துள்ள காஸா மக்களுக்கு இது போதுமானதாக இல்லை.
காஸாவில் கிழக்கு பகுதியில் இஸ்ரேல் படையினர், ராணுவ வாகனங்கள் மூலமாகவும் மேற்கு பகுதியில் டிரோன்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
கான் யூனிஸ் பகுதியின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியிலும் கடும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
காஸாவின் வடக்கே, பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தங்கள் இடங்களுக்கு இடம்பெயர்ந்து வரும் நிலையில் கடந்த 75 நாள்களாக அந்த பகுதிக்கு எந்த மனிதாபிமான உதவிகளும் வரவில்லை என்று ஐ.நா. கூறுகிறது.
காஸாவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் இன்னும் பசியுடன்தான் படுக்கச் செல்கின்றனர். பொருளாதாரம் இன்றி கையில் பணம் இன்றி அவர்களால் எதுவும் சந்தையில் வாங்க முடிவதில்லை. இறைச்சி, முட்டை ஆகியவற்றுக்கு பற்றாக்குறை உள்ளது, தண்ணீருக்குக்கூட இன்னும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
மருத்துவமனைகளில் இன்னும் போதிய மருந்துகள் இல்லை. சுகாதாரம் இன்றி குழந்தைகள், பெண்கள் பலரும் பல்வேறு நோய்க்கு ஆளாகியுள்ளனர். ஆனால் அங்கு போதிய மருத்துவ வசதிகள் இன்னும் இல்லை.
பெரும்பாலான குழந்தைகள் போரின்போது தடுப்பூசி போடவில்லை என்பதால் அவர்களுக்கு தடுப்பூசி கிடைக்க காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் முகாமைத் தொடங்கியுள்ளது.
ஒரு சில பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
அதேநேரத்தில் காஸாவில் நீர் ஆதாரங்களும் மிகவும் மாசடைந்துள்ளன. சுற்றுச்சூழலும் மோசமாகக் காணப்படுகிறது. சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை என அங்குள்ள மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலான மக்கள் வீடுகளை இழந்த நிலையில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர்.
மாற்றத்தைத் தேடி வாழ்க்கைத் தரத்தைத் தேடி காஸா மக்கள் இன்னும் காத்திருக்கிறார்கள்.
இதையும் படிக்க | செயல்படாத பழைய வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை எடுக்க வேண்டுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.