மலேசியா அருகே ரோஹிங்கயா அகதிகள் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
மியான்மரில் இருந்து மலேசியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான பகுதியில் இருந்து மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டன. அதையடுத்து, இந்த விபத்தின் மொத்த உயிரிழப்பு 26-ஆக உயர்ந்துள்ளது. இதில் 20 பேரது உடல்கள் மலேசியா பகுதியில் இருந்து மீட்கப்பட்டன. அவர்களில் ஒன்பது பேர் பெண்கள், நான்கு பேர் சிறுவர்கள். இது தவிர 6 உடல்கள் தாய்லாந்து கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. விபத்துப் பகுதியில் இருந்து இதுவரை14 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். எஞ்சியவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
பாதுகாப்பு அங்கி இல்லாமல் கடலில் மூழ்கியவர்கள் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இருந்தாலும், மிதக்கும் பொருள்களைப் பற்றிக்கொண்டு யாராவது தப்பியிருக்கிறார்களா என்று தேடி வருகிறோம் என்று அதிகாரிகள் கூறினர்.
மியான்மரில் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுபான்மை முஸ்லிம் இனத்தவரான ரோஹிங்கயாக்கள், அண்டை நாடான வங்கதேசத்திலும், மலேசியா போன்ற பிற நாடுகளிலும் தஞ்சமடைந்துவருகின்றனர். வங்கதேசத்தில் மட்டும் 13 லட்சம் ரோஹிங்கயா அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழலில், மலேசியாவை நோக்கி இரு வாரங்களுக்கு முன்னர் படகில் புறப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள், வேறு இரு படகுகளுக்கு வியாழக்கிழமை மாற்றப்பட்டதாகவும், சிறிய படகில் சுமார் 70 பேரும் மற்றொரு படகில் 230 பேரும் இருந்ததாகவும் போலீஸôர் தெரிவித்தனர். அதில் சிறிய படகு அந்தமான் கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்த 21 பேரது உடல்கள்தான் தற்போது மீட்கப்பட்டுள்ளன. 230 பேரை ஏற்றிச் சென்ற மற்றொரு படகின் நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.