தைவான் நாட்டில், ஃபுங் - வாங் புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மற்றும் மலைப் பகுதிகளில் வசிக்கும் 8,300-க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தெற்கு சீன கடலில் உருவாகியுள்ள ஃபுங் - வாங் புயல், கடந்த நவ.9 ஆம் தேதி சக்தி வாய்ந்த புயலாக பிலிப்பின்ஸ் நாட்டில் கரையைக் கடந்தது.
இந்தப் புயலால், அந்நாட்டில் கடும் கனமழை பெய்து, முக்கிய நகரங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், பிலிப்பின்ஸில் 27 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தைவானின் நிலப்பரப்பில் இருந்து 140 கி.மீ. தூரத்தில் மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் ஃபுங் - வாங் புயல், தென்மேற்கு தைவானில் இன்று (நவ. 12) மாலை அல்லது நாளை அதிகாலைக்குள் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஏற்கெனவே, தைவானின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், ஏராளமான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தைவானின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலோர மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 8,326 பேர் அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, பிலிப்பின்ஸ் நாட்டில் ஃபுங் - வாங் புயலினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். இதில், இன்று காலை நிலவரப்படி சுமார் 6,23,000-க்கும் அதிகமான மக்கள் தற்போது நிவாரண முகாம்களில் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜார்ஜியாவில் விழுந்து நொறுங்கிய துருக்கி ராணுவ சரக்கு விமானம்! 20 வீரர்கள் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.