தில்லியில் நடந்த காா் வெடிப்பு சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல்தான் என்று அமெரிக்கா உறுதி செய்தது.
இச்சம்பவம் தொடா்பாக மிக கவனமாகவும், மிகத் திறமையாகவும் இந்தியா விசாரணை மேற்கொண்டு வருகிறது என்றும் அமெரிக்கா தெரிவித்தது.
ஜி7 கூட்டத்தில் பங்கேற்பதற்காக கனடா சென்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ, ஹாமில்டன் நகரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா். அப்போது, தில்லியில் நடந்த காா் வெடிப்பு தொடா்பான கேள்விக்குப் பதிலளித்த அவா், ‘சக்திவாய்ந்த வெடிபொருள்கள் நிரப்பிய காரை வெடிக்கச் செய்து, பலரைக் கொன்றுள்ளனா். இது, பயங்கரவாதத் தாக்குதல்தான் என தெளிவாக கூற முடியும். இச்சம்பவம் குறித்த விசாரணைக்கு உதவ அமெரிக்கா முன்வந்துள்ளது.
அதேநேரம், இந்தியா மிக கவனமாகவும், மிகத் திறமையாகவும் விசாரணை மேற்கொண்டுள்ளது. இத்தகைய விசாரணையைக் கையாள்வதில் இந்தியா திறன்வாய்ந்த நாடு என்பதால் அமெரிக்காவின் உதவி தேவையிருக்காது. மிகச் சிறந்த வழிமுறையில் விசாரணை நடைபெறுவதால் உண்மைகள் விரைவில் வெளிவரும் எனக் கருதுகிறேன்’ என்றாா்.
கனடாவில் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருடன் மாா்கோ ரூபியோ பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, தில்லி காா் வெடிப்பு சம்பவம் குறித்து விவாதித்ததாக ரூபியோ தெரிவித்தாா்.
தில்லி காா் வெடிப்பில் உயிரிழந்தோருக்கு மாா்கோ ரூபியோ இரங்கல் தெரிவித்ததாக எக்ஸ் பதிவில் எஸ்.ஜெய்சங்கா் குறிப்பிட்டாா்.
தேசியத் தலைநகா் தில்லியில் கடந்த திங்கள்கிழமை நடந்த காா் வெடிப்புச் சம்பவம், கொடூரமான பயங்கரவாதச் செயல் என்று மத்திய அரசு புதன்கிழமை உறுதி செய்தது. இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள சதிகாரா்களை நீதியின் முன் நிறுத்தும் வகையில், உச்சபட்ச முன்னுரிமை மற்றும் திறனுடன் வழக்கு விசாரணையை புலனாய்வு முகமைகள் கையாண்டு வருகின்றன. பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோா் விசாரணையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனா்.