அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கையெழுத்திட்டார்.
இதன்மூலம், கடந்த 43 நாள்களாக முடங்கியிருந்த அமெரிக்க அரசுத் துறைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டு அடுத்தாண்டுக்கான செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். இந்த மசோதாவுக்கு 60 சதவீத வாக்குகள் தேவை.
ஆனால், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் எம்பிக்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்ததால், மசோதா நிறைவேறாமல் கடந்த 43 நாள்களாக அரசுத் துறை முடங்கியிருந்தது.
இதனால், அரசின் பல்வேறு துறைகள் முடங்கிய நிலையில், விமானக் கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர், மருத்துவத்துறை உள்ளிட்ட அத்தியாவசியப் பணியாளர்கள் மட்டுமே பணிபுரிந்தனர். இருப்பினும், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால், அவர்களும் பணிக்கு வராததால் விமானப் போக்குவரத்து கடந்த சில நாள்களாக முடங்கியது.
இந்த நிலையில், தங்களது கட்சி நிலைப்பாட்டை மீறி, அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் சமரசம் செய்துகொள்ள சில ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் முன்வந்ததையடுத்து, இந்த மசோதா செனட் அவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஓவல் அலுவலகத்தில் செலவீனங்களுக்கான மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
அப்போது பேசிய டிரம்ப், “கடந்த 43 நாள்களாக, சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்காக கோடிக்கணக்கான டாலர்களைப் பறிக்க முயற்சித்த ஜனநாயகக் கட்சியினர், அமெரிக்க அரசை முடக்கினர். இன்று, மிரட்டி பணத்தை பறிப்பதற்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்ற தெளிவான செய்தியை நாங்கள் சொல்ல விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
இந்த மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டதன் மூலம், 43 நாள்களுக்குப் பிறகு, நாளை காலைமுதல் அனைத்து துறைகளும் வழக்கம்போல் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க செனட் அவையில் 222 பேர் மசோதாவுக்கு ஆதரவாகவும், 209 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.