சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தால் தனக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பு ஒருதலைபட்சமானது, அரசியல் நோக்கம் கொண்டது என வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது. இதில் 1,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 20,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இளைஞர்களின் தொடர் போராட்டங்களால் பிரதமா் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, அங்கிருந்து தப்பித்து இந்தியாவில் கடந்த ஓராண்டாக தஞ்சமடைந்துள்ளார்.
தொடர்ந்து வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றார். இதனிடையே வன்முறையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதற்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்கில் முன்னாள் பிரதமர் ஹேக் ஹசீனா மற்றும் அப்போதைய உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறை தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு விசாரணை பல மாதங்களாக நடைபெற்ற நிலையில் இன்று(திங்கள்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மனித குலத்திற்கு எதிராக செய்த குற்றங்களுக்காக, ஷேக் ஹசீனா குற்றவாளி என அந்த நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளதுடன் மரண தண்டனை விதித்துள்ளது.
முன்னதாக ஷேக் ஹசீனா, தன் சொந்த நாட்டு மக்களையே கொலை செய்ய உத்தரவிட்டதாகவும் வங்கதேச படுகொலைகளுக்கு மூளையாகச் செயல்பட்டுள்ளதாகவும் நீதிபதி கூறியுள்ளார்.
அதன்படி ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கமலுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் முன்னாள் காவல்துறைத் தலைவர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன் தூக்கு தண்டனையில் இருந்து தப்பித்துள்ளார். அவர் சாட்சியாக மாறிய நிலையில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக ஷேக் ஹசீனா, தன்னுடைய தீர்ப்பு நியாயமாக இல்லை, அரசியல்ரீதியானது என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"எனக்கு விதிக்கப்பட்ட தண்டனை ஒருதலைப்பட்சமானது, அரசியல் நோக்கம் கொண்டது. எனக்கு எதிராக அறிவிக்கப்பட்ட தீர்ப்பு, ஜனநாயகத்திற்கு எதிரான, அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் வழங்கப்படவில்லை. மாறாக மக்களால் தேர்வு செய்யப்படாத ஒரு அரசின் தலைமையிலான மோசடி தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டுள்ளது. அவை ஒருதலைபட்சமானவை.
வங்கதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமரையும் அவரது மிகப்பெரிய அரசியல் கட்சியான அவாமி லீக் கட்சியை இல்லாதபடி செய்யவும் இடைக்கால அரசில் இருக்கும் தீவிரவாதம் கொண்டவர்களின் வெட்கக்கேடான மற்றும் கொலைகார நோக்கத்துடன் கூடிய செயல் இது.
கடந்த ஆண்டு நடைபெற்ற வன்முறை குறித்து விசாரிக்கவோ சரியான தீர்ப்பு வழங்கும் நோக்கத்தையோ இந்த தீர்ப்பாயம் கொண்டிருக்கவில்லை. மாறாக எங்களின் அவாமி லீக் கட்சியை பலிகடா ஆக்குவதையும் யூனுஸ் அரசின் தோல்விகளை உலகத்தின் கவனத்தில் இருந்து மறைப்பதையுமே நோக்கமாகக் கொண்டுள்ளது. அவரது தலைமையில் வங்கதேசத்தில் நீதித்துறை சீர்குலைந்துள்ளது.
வங்கதேசத்தில் நடந்த வன்முறை அதிகாரத்தைக் கைப்பற்ற யூனுஸின் உத்தரவின்பேரில் நடத்தப்பட்ட தாக்குதலாகும். அவரது ஆட்சியில் சிறைக்கைதிகள், தீவிரவாதிகள் பலரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மாறாக, அவாமி லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிறையில் உள்ளனர். தற்போது அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்கள் நசுக்கப்படுகிறார்கள்.
மனித உரிமை மீறல்கள் குறித்த தீர்ப்பாயத்தின் பிற குற்றச்சாட்டுகளையும் நான் நிராகரிக்கிறேன். மனித உரிமைகள் மற்றும் மேம்பாடு குறித்த எனது அரசின் சாதனையைப் பற்றி நினைக்கும்போது நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
2010 ஆம் ஆண்டு வங்கதேசத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சேர நாங்கள் வழிசெய்தோம். மியான்மரில் இருந்து தப்பி வந்த லட்சக்கணக்கான ரோஹிங்கியாக்களுக்கு அடைக்கலம் கொடுத்தோம். மின்சாரம், கல்வியை விரிவுபடுத்தினோம். 15 ஆண்டுகளில் 450% மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை ஏற்படுத்தினோம். கோடிக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டோம். இந்த சாதனைகள் வரலாற்று சாதனைகள். அவை மனித உரிமைகள் மீது அக்கறை இல்லாத ஒரு தலைமையின் செயல்கள் அல்ல. யூனுஸும் அவரது பழிவாங்கும் கூட்டாளிகளும் இந்த சாதனைகளை கோர முடியாது.
ஆதாரங்களை சரிபார்க்கக்கூடிய சரியான நீதிமன்றத்தில் இந்த வழக்கை எதிர்கொள்ள நான் பயப்படவில்லை. வன்முறையின்போது நாங்கள் சூழ்நிலை தொடர்பான கட்டுப்பாட்டை இழந்துவிட்டோம். ஆனால் அது மக்கள் மீதான முன்கூட்டிய திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று கூற முடியாது" என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க | வங்கதேச வன்முறை- ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.