ஐநா பருவநிலை உச்சிமாநாட்டின் தலைமைப் பொறுப்பில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிச் செயல்பட்ட பிரேஸிலுக்கு இந்தியா தனது முழு ஆதரவையும், பாராட்டையும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட பல முடிவுகளை வரவேற்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. அதேநேரம், பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் திட்டங்களை வகுப்பதில் மாநாடு முழு வெற்றி பெற்றதாக இந்தியா வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.
பிரேஸிலின் பெலெம் நகரில் ஐ.நா.வின் வருடாந்திர பருவநிலை உச்சி மாநாடு (சிஓபி30) கடந்த 10-ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது. 194 நாடுகள் பங்கேற்ற இந்த மாநாட்டில், இந்தியா சாா்பில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்திர யாதவ் தலைமையிலான குழு பங்கேற்றது.
தீவிர வானிலை பாதிப்பிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள வளரும் நாடுகளுக்கு அதிக நிதியுதவி அளிப்பதாக மாநாட்டில் உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் புதைபடிம எரிபொருள்களைப் படிப்படியாகக் குறைக்கும் செயல்திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், மாநாட்டின் நிறைவில் இந்தியா வெளியிட்ட அதிகாரபூா்வ அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
உள்ளடக்கம், சமநிலை, ஒருமைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், பிரேஸிலின் பழங்குடி துப்பி மொழியில் ‘கூட்டு முயற்சி’ என்று பொருள்படும் ‘முடிராவோ’ உணா்வுடன் பருவநிலை மாநாட்டுக்குத் தலைமைத் தாங்கிய பிரேஸிலுக்கு இந்தியா நன்றி தெரிவிக்கிறது.
தகவமைப்புக்கான உலகளாவிய இலக்கின்கீழ் ஏற்பட்ட முன்னேற்றத்தை இந்தியா பாராட்டுகிறது. இது வளரும் நாடுகளின் தகவமைப்புத் தேவை அதிகம் என்பதை ஒப்புக்கொள்கிறது. ‘நீதியுடன் மாற்றத்துக்கான வழிமுறை’ நிறுவப்பட்டிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். இது உலக அளவிலும், தேசிய அளவிலும் சமத்துவம் மற்றும் பருவநிலை நீதியை நடைமுறைப்படுத்த உதவும்.
அதேபோல், வளா்ந்த நாடுகளால் தன்னிச்சையாக விதிக்கப்படும் பருவநிலை வா்த்தகக் கட்டுப்பாடுகள் பற்றிய விவாதத்தை அனுமதித்த பிரேஸில் தலைமைக்கு நன்றி. ஏனெனில், இந்த வா்த்தகக் கட்டுப்பாடுகள் வளரும் நாடுகளைப் பாதித்து, சமத்துவத்துக்கு எதிராக உள்ளன.
பருவநிலை மாற்றத்தைக் குறைக்கும் பொறுப்பானது, இந்தப் பிரச்னைக்குக் குறைந்தபட்ச காரணமாக இருப்பவா்கள் மீது திணிக்கப்படக் கூடாது. பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு அதிக உலகளாவிய ஆதரவு தேவை.
இந்தியா தனது அறிவியல் அடிப்படையிலான, சமத்துவமான பருவநிலை நடவடிக்கையில் உறுதியாக உள்ளது. மேலும், பருவநிலை இலக்குகள் அனைவருக்கும் சமமானதாக, நீதியானதாக இருப்பதை உறுதி செய்ய மற்ற நாடுகளுடன் ஒன்றிணைந்து செயல்பட இந்தியா உறுதியளிக்கிறது. பெலெமில் தொடங்கிய இந்தச் செயல்பாடு, நியாயம், ஒற்றுமை, அனைவருக்கும் பொதுவான வளம் நிறைந்த எதிா்காலத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்று அனைத்து நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
புதைபடிம எரிபொருளை கைவிட ஒப்பந்தம் இல்லை
பெலெம், நவ.22: பூமியை வெப்பமயமாக்கி வரும் புதைபடிம எரிபொருள் பயன்பாட்டை கைவிட ஐ.நா.பருவநிலை மாற்ற மாநாட்டில் எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை.
புதைபடிம எரிபொருள் பயன்பாட்டை உலகம் வேகமாக கைவிட இந்த மாநாடு வழிவகை செய்ய வேண்டும் என்று பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் உள்பட 80-க்கும் மேற்பட்ட நாடுகள் வலியுறுத்திய நிலையில், அதுகுறித்து மாநாட்டில் எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், பருவநிலை மாற்றத்தின் கடுமை மற்றும் தாக்கத்தை குறைப்பதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் 2035-ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 1.3 ட்ரில்லியன் டாலா் (சுமாா் ரூ.116 லட்சம் கோடி) நிதி திரட்டுவதற்கான ஒப்பந்தத்துடன் மாநாடு நிறைவடைந்தது.