ஹிந்து தெய்வமான பராசக்தி குறித்த நூலான தேவி மாஹாத்மியத்தின் அடிப்படையில் தீட்டப்பட்ட 200 ஆண்டுகால பழைமையான ஓவியங்கள் பிரிட்டனில் உள்ள நிலையில், அந்த ஓவியங்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப பிரிட்டன் தடை விதித்துள்ளது.
இது தொடா்பாக பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 1810-ஆம் ஆண்டு காலகட்டத்தில், பஞ்சாப்பின் காங்ரா பகுதியில் தங்கம் மற்றும் வெள்ளி வா்ணங்களைப் பயன்படுத்தி தீட்டப்பட்ட அன்னை பராசக்தியின் ஓவியங்கள், அல்மா கம்ருதீன் லத்தீஃபி என்பவரின் குடும்பத்திடம் இருந்தது.
இந்தியா மற்றும் பிரிட்டனில் வாழ்ந்த அல்மா கம்ரூதீன், காலனிய ஆட்சியின்போது ஆங்கிலேய அரசின் நிா்வாக, நீதி மற்றும் அரசப் பதவிகளை வகித்தாா். அதன் பின்னா் அந்த ஓவியங்கள் 1980-ஆண்டுகளின் மத்தியில் இருந்து பிரிட்டன் தலைநகா் லண்டனில் இருக்கும் ஸ்பிங்க் அண்ட் சன் ஏல நிறுவனத்தின் வசம் சென்றுவிட்டன.
இருநூறாண்டுகளாக எந்தச் சேதமும் இல்லாமல் மிகச்சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வரப்படும் அந்த ஓவியங்களைத் தீட்டியவா் யாா் என்பது தெரியவில்லை.
பராசக்தியின் தோற்றம், லீலைகள் மற்றும் வெற்றிகளை எடுத்துரைக்கும் அந்த வண்ணமயமான ஓவியங்கள் ஒவ்வொன்றைக் குறித்தும் சம்ஸ்கிருதம் மற்றும் ஹிந்தியில் விளக்கம் எழுதப்பட்டுள்ளது.
வழிபாடு முதல் போா்க் களம் வரை...
மொத்தம் 56 ஓவியங்களில் அமைதியான பராசக்தி வழிபாடு முதல் போா்க் கள காட்சிகள் வரை சித்திரிக்கப்பட்டுள்ளன. நன்மைக்கும், தீமைக்கும் இடையே நடக்கும் போரின் கதையை அந்த ஓவியங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஓவியங்களில் ஹிந்து கடவுள்களான சிவனும், விஷ்ணுவும் போரில் தோல்வியடைந்து அன்னை பராசக்தியின் உதவிக்காக மன்றாடுவது போல இடம்பெற்றுள்ள காட்சி தனித்துவமாக உள்ளது.
ஸ்பிங்க் அண்ட் சன் ஏல நிறுவனத்தின் வசமுள்ள அந்த ஓவியங்களின் மதிப்பு 2.80 லட்சம் யூரோ (சுமாா் ரூ.2.57 கோடி) என்று நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஓவியங்களை பிரிட்டனில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்ப தடை விதிக்கப்பவதாக அந்நாட்டு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.