பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள துணை ராணுவத்தின் தலைமையகம் மீது திங்கள்கிழமை காலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை உறுதி செய்துள்ள பெஷாவர் நகரின் காவல்துறை அதிகாரி, அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
பாகிஸ்தானில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் துணை ராணுவப் படைப் பிரிவுகளில் ஒன்றான ஃபெடரல் கான்ஸ்டபலரியின் தலைமையகம் பெஷாவரில் அமைந்துள்ளது.
ஃபெடரல் கான்ஸ்டபலரியின் தலைமையகம் வெளியே இன்று காலை தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்ததாக முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
வெடிகுண்டுடன் சென்ற பயங்கரவாதி ஒருவர், நுழைவு வாயிலில் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிக் குண்டுச் சப்தம் கேட்டு வருகின்றது.
அதிகளவிலான குடியிருப்புப் பகுதி அமைந்துள்ள இடத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள பாதுகாப்புப் படையினர், அப்பகுதியை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
கடந்த சில நாள்களாக பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, செப்டம்பர் மாதம் பலூசிஸ்தானில் உள்ள துணை ராணுவத்தின் தலைமையகத்தை குறிவைத்து தற்கொலைப் படை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.