அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அருகே ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு காவலர்கள் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகேவுள்ள ஃபேராகட் வெஸ்ட் மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரைத் தாக்கிய ஒருவர், அவரின் துப்பாக்கியைப் பிடிங்கி மார்பு மற்றும் தலையில் சுட்டுள்ளார்.
இதனை தடுக்க முயற்சித்த மற்றொரு காவலரையும் அவர் சுட்டுள்ளார். இதையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியவரை மற்றொரு காவலர் சுட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த இரு காவலர்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கடுமையான விளைவுகளை சந்திப்பார் என்றும், பாதுகாப்புப் படை வீரர்களை கடவுள் ஆசிர்வதிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற கோணத்தில் அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
முதல்கட்டமாக துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 29 வயதான ரஹ்மானுல்லா லக்கன்வால் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ரஹ்மானுல்லாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
'ஆபரேஷன் அல்லீஸ் வெல்கம்' திட்டத்தின் கீழ் கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குள் நுழைந்த இவர், விசா காலாவதியான பிறகும் தொடர்ந்து அமெரிக்காவில் தங்கி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படையைத் திரும்பப் பெற்றபோது, அந்நாட்டை விட்டு வெளியேற விரும்புவோர் அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகள் தற்காலிகமாக தங்கிக் கொள்வதற்காக 'ஆபரேஷன் அல்லீஸ் வெல்கம்' அறிமுகப்படுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.