வலுவான ராணுவ நடவடிக்கையாலும், நண்பர் டிரம்பின் மகத்தான முயற்சிகள் மூலம் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக அனைத்து பிணைக் கைதிகளும் வீட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும், இஸ்ரேலுக்கு கிடைத்த தார்மீக வெற்றி என்றும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் படையினருக்கும் இடையே 2 ஆண்டுகளைக் கடந்து போர் நடைபெற்று வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 20 அம்ச திட்டத்தை ஏற்று, இரு தரப்பினரும் முதல்கட்டப் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:
”முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம், எங்கள் அனைத்து பிணைக் கைதிகளும் வீடு திரும்புவார்கள். இது இஸ்ரேலுக்கு கிடைத்த தார்மீக வெற்றியாகும். அனைத்து பிணைக் கைதிகளும் திரும்பும் வரை மற்றும் எங்கள் அனைத்து இலக்குகளும் அடையும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என நான் தெளிவாகக் கூறியிருந்தேன்.
உறுதியான தீர்மானம், வலிமையான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் எங்கள் நெருங்கிய நண்பர் அதிபர் டிரம்பின் மகத்தான முயற்சிகள் மூலம், இந்த முக்கியமான திருப்புமுனையை அடைந்துள்ளோம்.
தலைமைத்துவம், கூட்டாண்மை, இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் எங்கள் பிணைக் கைதிகளின் சுதந்திரத்திற்கு அதிபர் டிரம்பின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் எங்கள் கூட்டணியை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.