மச்சாடோ 
உலகம்

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு! டொனால்ட் டிரம்புக்கு ஏமாற்றம்

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்புக்கு நோபல் பரிசு இல்லை.

இணையதளச் செய்திப் பிரிவு

2025 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுவேலாவின் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்படும் என நோபல் பரிசு தெரிவுக் குழு அறிவித்துள்ளது.

வெனிசுவேலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காக போராடியதற்காக, மரியா கொரினாவுக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெனிசுவேலாவில் ஜனநாயகத்துக்காகத் தொடர்ந்து போராடி தற்போது தலைமறைவாக இருப்பவர் மரியா கொரினா மச்சாடோ என்பது குறிப்பிடத்தக்கது.

பல போர்களை நிறுத்தியிருக்கிறேன், எனவே, அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிவந்த நிலையில், அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை. இது அவருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியா - பாகிஸ்தான் உள்பட 8 போர்களைத் தான் நிறுத்தியதாக டொனால்ட் டிரம்ப் நிறுத்தியதாக கூறி வந்த நிலையில் ஏற்கனவே, நான்கு அமெரிக்க அதிபர்கள் நோபல் பரிசு வென்றிருக்கும் நிலையில், ஐந்தாவது அதிபராக இவர் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகப்பெரிய ஏமாற்றம் டிரம்புக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதிக்குள் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட 339 பேரில் டொனால்ட் டிரம்ப் பெயர் இல்லை என்றும் கூறப்படுகிறது.

உலகம் முழுக்க சர்வாதிகாரம் என்ற இருள் விலகிவரும் நிலையில், அதற்காகப் போராடி வரும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதே சிறப்பானதாக இருக்கும் என்று பரிசை அறிவித்த நார்வே நோபல் குழு தெரிவித்துள்ளது.

மேலும், ஜனநாயகத்துக்காகப் போராடி வருபவர்களுக்கே விருது என்றும், சர்வாதிகாரத்தை நம்பக் கூடியவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாது என்பதையும்தான் இந்தக் கருத்து தெளிவுபடுத்துவதாகவும் கூறப்படுகிறது.

நார்வே நோபல் குழுதான், நோபல் பரிசு பெறுபவர்களைத் தேர்வு செய்கிறது. இந்தக் குழுவை நார்வே நாடாளுமன்றமே நியமனம் செய்கிறது.

வெனிசுவேலாவைச் சேர்ந்த மரியா கொரினா, அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகவும் முக்கிய அரசியல்வாதியாகவும் இருந்தவர்.

நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கும் நேரத்தில், அவர், அந்நாட்டில் ஜனநாயகத்தைக் காக்க நடத்திய போராட்டங்களுக்காகக் கைது செய்யப்பட்டுப் பிணையில் வந்து தலைமறைவாக இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனநாயகத்தைக் காக்கவும் மனித உரிமைகளைக் காக்கவும் தொடர்ந்து நடத்திவரும் போராட்டங்களுக்காக நோபல் பரிசு வழங்கப்படும் நிலையில், அவரை கைது செய்ய வெனிசுவேலா அரசு தயாராக இருப்பதால் அவர் தலைமறைவாக இருக்கிறார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு வெனிசுவேலாவில் நடைபெற்ற தேர்தலில், வன்முறை வெடித்தது. தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள எதிர்க்கட்சித் தரப்பு மறுத்து வரும் நிலையில் தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக மரியா ஜனவரி மாதத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட பிறகு அவர் தலைமறைவாகிவிட்டார். இத்தகைய சூழலில்தான் அவருடைய முயற்சியை பாராட்டி நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் திங்கள்கிழமை தொடங்கி, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

வரும் திங்கள்கிழமை பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தம் நகரில் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு

குருகிராம்: சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

ஆற்காடு நகரில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், 2 பசுமை பூங்காக்கள்: அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா்

10 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

பெண்ணைத் தாக்கி மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT