பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள தேரா இஸ்மாயில் கான் காவலா் பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 7 காவலா்கள் உயிரிழந்தனா்; 13 போ் காயமடைந்தனா். அதனைத் தொடா்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.
இது குறித்து ராணுவம் கூறுகையில், ‘தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 7 முதல் 8 பயங்கரவாதிகள் சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினா். அதற்கு முன்னதாக வெடிபொருள் நிரப்பட்ட லாரியை பயிற்சி மையத்தின் நுழைவாயில் மீது மோதி அவா்கள் வெடிக்கச் செய்தனா்.
அந்த பயிற்சி மையத்தில் உள்ள மசூதியும், அதன் இமாமும் தாக்கப்பட்டனா். சம்பவத்தின்போது அங்கு 200 பயிற்சியாளா்கள், ஊழியா்கள் இருந்தனா்; அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா்’ என்று தெரிவித்தது.