உலகம்

ஹங்கேரியில் புதினுடன் சந்திப்பு: டிரம்ப் அறிவிப்பு

தினமணி செய்திச் சேவை

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினைச் சந்தித்துப் பேசவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் அறிவித்துள்ளார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர இந்த சந்திப்பு உதவும் என்று அவர் கூறினார்.

இரு தலைவர்களும் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நடத்திய தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது: உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக ரஷிய அதிபர் புதினும் நானும் தொலைபேசியில் விவாதித்தோம். அடுத்த இரு வாரங்களுக்குள் புடாபெஸ்ட்டில் இருவரும் சந்திப்போம் என்று தனது பதிவில் டிரம்ப் தெரிவித்தார்.

ஹங்கேரி வரவேற்பு: இந்த சந்திப்புக்கு டிரம்ப்பும் புதினும் தங்கள் நாட்டைத் தேர்ந்தெடுத்ததை ஹங்கேரி வரவேற்றுள்ளது.

இது குறித்து அந்த நாட்டுப் பிரதமர் விக்டர் ஆர்பன் கூறுகையில், "ஐரோப்பாவில் இத்தகைய சந்திப்பு நடக்கக்கூடிய ஒரே இடம் ஹங்கேரிதான்' என்றார். ஐரோப்பிய யூனியனுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்துவரும் ஆர்பன், டிரம்ப், புதின் ஆகிய இரு தலைவர்களுடனும் நெருக்கமானவராக அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீதான படையெடுப்பின்போது, அந்த நாட்டில் இருந்து சிறுவர்களை தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்றது தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) புதினுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, ஐசிசி நீதிமன்ற ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள ஹங்கேரிக்கு புதின் வந்தால், அவரை அந்த நாடு கைது செய்ய வேண்டும். இருந்தாலும், அரசியல் காரணங்களுக்காக இந்த உத்தரவை புறக்கணிக்கப்போவதாக ஹங்கேரி அறிவித்துள்ளது.

டிரம்ப்-உக்ரைன் சந்திப்பு: உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, வெள்ளை மாளிகையில் டிரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருந்த நேரத்தில், விளாதிமீர் புதினுடனான தனது சந்திப்பு குறித்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷியாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற, அமெரிக்காவின் நீண்ட தொலைவு ஏவுகணைகளான டாமஹாக் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று ùஸலென்ஸ்கி நீண்ட காலமாகவே வலியுறுத்திவருகிறார்.

இதற்கு தயக்கம் காட்டி வந்த டிரம்ப், தனது அமைதி முயற்சிகளை மதிக்காமல் உக்ரைன் மீது ரஷியா தீவிர தாக்குதலை நடத்திவருவதைத் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, டாமஹாக் ஏவுகணைகள் உக்ரைனுக்குக் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை சற்று அதிகரித்தது. அதற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே டிரம்ப்பை ùஸலென்ஸ்கி நேரில் சந்திக்க வந்தார்.

ஆனால் அதற்கு முன்னதாகவே டிரம்ப்பும் புதினும் தொலைபேசியில் பேசி, அடுத்த நேரடி பேச்சுவார்த்தை குறித்த முடிவை எடுத்தவுடன் ரஷியாவுக்கு எதிரான தனது கடுமையை டிரம்ப் குறைத்துள்ளார். எனவே, உக்ரைனுக்கு டாமஹாக் ஏவுகணைகள் கிடைப்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது.

2022 பிப்ரவரி 24-ஆம் தேதி உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து, எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் கிரீமியா தீபகற்பத்தை ஆக்கிரமித்தது போல் கிழக்குப் பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளை கைப்பற்றியது. இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கோடிக்கணக்கானவர்கள் புலம்பெயர்ந்துள்ளனர்.

இந்தப் போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கி வருகின்றன. இந்தச் சூழலில் அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த 2025-ல் பதவியேற்ற பிறகு, போரை முடிவுக்குக் கொண்டுவர தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இருந்தாலும் அதில் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை.

இந்தச் சூழலில், போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக இரு தலைவர்களும் ஹங்கேரியில் மீண்டும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிடித்தமான தொல்லையே... சகோதரி பிறந்த நாளுக்கு காஜல் அகர்வால் நெகிழ்ச்சி!

விஜய் தலைமையில் கூட்டணி உருவாகும்: டிடிவி தினகரன் பேட்டி

2 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

ஓஆர்எஸ் என்பது எல்லாம் ஓஆர்எஸ் அல்ல; பயன்படுத்தத் தடை!

தனியார் பல்கலைக் கழக சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: டிடிவி தினகரன்

SCROLL FOR NEXT