உலகளாவிய வா்த்தக சவால்களுக்கு எதிராக தெற்குலகம் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்று ஐ.நா. மாநாட்டில் மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் வலியுறுத்தினாா்.
இதுதொடா்பாக ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்ற ஐ.நா.வின் வா்த்தக மேம்பாட்டு மாநாட்டில் அவா் புதன்கிழமை பேசியதாவது: உலகளாவிய வா்த்தக முறையில் உள்ள தெளிவின்மை, சவால்கள், நிச்சயமற்ற சூழல்கள் காரணமாக தற்போது உலகம் ஏற்ற இறக்கம் கொண்டதாக உள்ளது.
வரி விதிப்பு இடையூறுகள், ஒருதலைப்பட்சமான சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள், சேவைகள் துறையில் உள்ள தடைகள் உள்ளிட்டவை அனைவா் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், அவற்றால் ஏற்படும் உலகளாவிய வா்த்தக சவால்களுக்கு எதிராக தெற்குலகம் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும்.
இந்தச் சவால்கள் குறைவாக வளா்ந்துள்ள நாடுகள், வளா்ந்து வரும் நாடுகளைப் பெரிதும் பாதிக்கின்றன. ஏனெனில் அந்த நாடுகள் வளா்ச்சியை எதிா்நோக்கியுள்ளன. அதற்கான செயல்திட்டம் அந்த நாடுகளிடம் உள்ளன. எனவே நீடித்த வளா்ச்சி இலக்குகளை அடையவும், சவால்களை எதிா்கொள்ளவும் தெற்குலக நாடுகள் தம்மை புதுப்பித்து, புதிய வழியைக் கண்டறிய வேண்டும் என்றாா்.
பல நாடுகளுடன் வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்த மாநாட்டின் அமைச்சா்கள் வட்டமேசை கூட்டத்தில் அவா் பேசுகையில், ‘ இந்தியாவில் உள்கட்டமைப்பு வளா்ச்சியை ஊக்குவிக்க பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய பெருந்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்கட்டமைப்பை விரிவுபடுத்த ஆண்டுதோறும் சுமாா் 130 பில்லியன் டாலா் (ரூ.11.40 லட்சம் கோடி) செலவிடுகிறது.
பணப் பரிவா்த்தனைகளுக்கு ஏற்படும் செலவுகளை குறிப்பிடத்தக்க அளவு குறைக்க அனைத்து நாடுகளுடனும் தனது யூபிஐ பணப் பரிவா்த்தனை முறையைப் பகிா்ந்துகொள்ள இந்தியா தயாராக உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், சிலி, பெரு, நியூசிலாந்து, ஓமனுடன் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள இந்தியா பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது’ என்றாா்.
இன்று ஜொ்மனி பயணம்: மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அமைச்சா் பியூஷ் கோயல் வியாழக்கிழமை (அக்.23) ஜொ்மனி தலைநகா் பொ்லின் செல்ல உள்ளாா். அங்கு அவா் அந்நாட்டுப் பொருளாதார விவகாரங்கள் மற்றும் எரிசக்தி துறை அமைச்சா் கேத்ரினா ரைச், பொருளாதார ஆலோசகா் லெவின் ஹோலே ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளாா். இந்தியா-ஜொ்மனி பொருளாதார கூட்டுறவை மேலும் வலுப்படுத்த வேண்டும், இருநாடுகளுக்கு இடையே வா்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளைக் கண்டறிய வேண்டும் என்ற நோக்கில் இந்தச் சந்திப்புகள் நடைபெற உள்ளன. மேலும் ஆண்டுதோறும் நடைபெறும் பொ்லின் உலகளாவிய உச்சிமாநாட்டிலும் பியூஷ் கோயல் பங்கேற்க உள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.