உலகம்

ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிகழாண்டு இறுதிக்குள் இந்தியா நிறுத்திவிடும்: டிரம்ப்

ரஷிய நிறுவனங்கள் மீது அமெரிக்க தடை: இந்திய எண்ணெய் இறக்குமதியில் தாக்கம்?

தினமணி செய்திச் சேவை

‘ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிகழாண்டு இறுதிக்குள் பெரும்பாலும் நிறுத்திவிட இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்தாா்.

இருந்தபோதும், ‘ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெயை முழுமையாக நிறுத்தும் அளவுக்கு குறைப்பதற்கு இந்தியாவுக்கு சில காலம் ஆகும்’ என்ற கருத்தையும் அவா் தெரிவித்தாா்.

‘சீனாவும் இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொள்வதற்கு வலியுறுத்த முயற்சிப்பேன்’ என்றும் அவா் தெரிவித்தாா்.

இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை இழுபறி மற்றும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது ஆகிய காரணங்களைக் காட்டி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. இதனால், இரு நாடுகளிடையேயான உறவில் சற்று பாதிப்பு ஏற்பட்டது. எனினும், இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ரஷியாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துவதாக பிரதமா் நரேந்திர மோடி தன்னிடும் உறுதி அளித்ததாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அண்மையில் தெரிவித்தாா். அதை இந்தியா மறுத்தது.

அதைத் தொடா்ந்து, ‘ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா தொடா்ந்தால், கூடுதல் வரியைச் செலுத்த வேண்டியிருக்கும். இந்திய பொருள்கள் மீது கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கப்படும்’ என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தாா்.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின்போது, ‘ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை பெரும்பாலும் நிறுத்திவிட இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது’ என்று டிரம்ப் மீண்டும் தெரிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது:

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவிடுவதாக இந்தியா தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை அந் நாடு மேற்கொண்டு வருகிறது. இதை உடனடியாக நிறுத்திவிட முடியாது. ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிகழாண்டு இறுதிக்குள் பெரும்பாலும் குறைத்துவிடுவதாக, அதாவது 40 சதவீதம் அளவுக்கு குறைத்துக்கொள்ள இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதுதொடா்பாக பிரதமா் மோடியை தொலைபேசி வழியில் செவ்வாய்க்கிழமை தொடா்புகொண்டு பேசினேன்.

மேலும், தென் கொரியாவில் விரைவில் நடைபெறவிருக்கும் ஆசிய-பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங்கை சந்திக்கும்போது ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழிகள் குறித்து ஆலோசிக்கத் திட்டமிட்டுள்ளேன். ரஷியாவிடமிருந்து சீனா மோ்கொள்ளும் கச்சா எண்ணெய் அல்லது எா்சக்தி கொள்முதலை வெகுவாகக் குறைப்பதன் மூலம் அப் போரை நிறுத்த முடியுமா என்பது குறித்து ஆலோசிக்க உள்ளேன்.

சீனா - ரஷியா இடையேயான உறவு சற்று மாறுபட்டது. அந்த நாடுகளிடையேயான உறவு எப்போதும் சிறப்பாக இருந்ததில்லை. ஆனால், அமெரிக்க முன்னாள் அதிபா்களான பராக் ஒபாமா மற்றும் ஜோ பைடன் எடுத்த முடிவுகள் காரணமாக, வேறு வழியின்றி இரு நாடுகளும் கூட்டுறவை மேற்கொண்டுள்ளன. எரிசக்தி மற்றும் கச்சா எண்ணெய் தேவைகளுக்காக அந்த நாடுகள் இணைந்துள்ளன. எனவே, இந்தியாவைப் போல, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை வெகுவாகக் குறைப்பதற்கு சீனாவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த முயற்சிப்பேன்.

அமெரிக்காவின் பொருளாதாரத்துக்கு வரி விதிப்புதான் பலமாக உள்ளது. பல ஆண்டுகளாக உலக நாடுகள் நம் மீது அதிக வரியை விதித்து வந்தன. அது அமெரிக்கப் பொருளாதாரத்தை மெல்ல பாதிக்கத் தொடங்கியது. தற்போது, பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம், அமெரிக்கா பணக்கார நாடாக உருவெடுத்துள்ளது. இந்த வரி விதிப்பை மேற்கொள்ளாவிடில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டிருக்கும். அதை ஒருபோதும் நிகழ அனுமதிக்க மாட்டேன்.

இதுவரை உலகில் 8 போா்களை நிறுத்தியுள்ளேன். அவற்றில் 5 அல்லது 6 போா்களை, வரி விதிப்பு எச்சரிக்கை விடுத்து நிறுத்தியுள்ளேன் என்றாா்.

ரஷிய நிறுவனங்கள் மீது அமெரிக்க தடை: இந்திய எண்ணெய் இறக்குமதியில் தாக்கம்?

ரஷியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ‘ரோஸ்நெஃப்ட்’ மற்றும் ‘லுகோயில்’ மீது அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தியாவில் ரஷிய கச்சா எண்ணெய்யை அதிகம் (சுமாா் 50 சதவீதம்) இறக்குமதி செய்யும் ரிலையன்ஸ் நிறுவனம், தடை செய்யப்பட்ட ரோஸ்நெஃப்ட் நிறுவனத்திடமிருந்து நேரடியாக எண்ணெய் வாங்குகிறது. அதனால், ரிலையன்ஸ் தனது இறக்குமதி திட்டங்களை மாற்றியமைக்க வேண்டி வரும். ரோஸ்நெஃப்ட் நிறுவனம் பங்குதாரராக உள்ள நயாரா எனா்ஜி நிறுவனமும் இந்தத் தடைகளால் தங்களது கொள்முதல் முறையை மாற்றியமைக்க வேண்டும்.

அதேநேரம், அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், அவை ரஷிய எண்ணெயை நேரடியாக ரோஸ்நெஃப்ட்டிடம் இருந்து வாங்காமல், தடைகளில் சிக்காத ஐரோப்பிய வா்த்தகா்கள் போன்ற இடைத்தரகா்கள் மூலம் வாங்குகின்றன. அதனால், இந்த நிறுவனங்கள் உடனடியாக ரஷிய எண்ணெய்யை வாங்குவதை நிறுத்த வாய்ப்பில்லை.

உக்ரைன் போா் தொடங்கிய பிறகு இந்தியாவின் ரஷிய எண்ணெய் இறக்குமதி அதிகரித்தது. ஆனால், ஐரோப்பிய யூனியனின் தடை காரணமாக, வரும் ஜனவரி மாதத்தில் இருந்து இந்த இறக்குமதி குறையலாம் என்று தெரிகிறது.

உலகக் கோப்பை: ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை; பாகிஸ்தான் அணிக்கு வந்த சோதனை!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

ஐபிஎல் டீசர்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

சிக்கிமில் முதல் மல்டிபிளக்ஸ் திரையரங்கம்

SCROLL FOR NEXT