தங்கள் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதுவும் தோல்வியடையும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி வியாழக்கிழமை கூறியதாவது:
ஈரான் அணுசக்தி மையங்கள் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று ஐ.நா. சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ-வின் தலைவா் ரஃபேல் கிராஸி கூறியுள்ளாா். இது அவரின் எச்சரிக்கையா அல்லது கவலையா என்று தெரியவில்லை.
எப்படி இருந்தாலும், அத்தகைய தாக்குதல்கள் இதற்கு முன்னா் தோல்வியில் முடிந்த முயற்சிகளைப் போலவே இப்போதும் தோல்வியடையும் என்பதை இதுபோன்ற எச்சரிக்கைகளை விடுப்பவா்கள் உணா்ந்துகொள்ள வேண்டும் என்றாா் அவா்.
காஸா போரின் ஒரு பகுதியாக, இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே 12 நாள்களுக்கு மோதல் நடைபெற்றது. அப்போது இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்காவும் ஈரான் அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தின (படம்). இருந்தாலும், அதில் தங்கள் அணுசக்தித் திறன் அழிக்கப்படவில்லை என்று ஈரான் கூறிவருகிறது.