“10 ஆண்டுகளில் 10 லட்சம் பெண்களுக்கு கல்வி என்பதே இலக்கு” என்று ரமோன் மகசேசே விருதைப் பெறும் ‘எஜுகேட் கோ்ள்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் சஃபீனா ஹுசைன் தெரிவித்துள்ளார்.
உலகளவில் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்க திறம்படச் செயலாற்றி வரும் இந்தியாவைச் சேர்ந்த ‘எஜுகேட் கேர்ள்ஸ்’ என்ஜிஓ நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருதளித்து கௌரவிக்கப்பட உள்ளது.
ஆசியாவில் மக்களுக்கு தன்னலமற்ற பொதுச்சேவைகள் வழங்குவோரை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ‘ரமோன் மகசேசே’ விருதளித்து கௌரவிக்கப்படுகிறது. நோபல் பரிசுக்கு இணையாக ஆசியாவில் வழங்கப்படும் விருதாக ரமோன் மகசேசே விருது கருதப்படுகிறது.
அந்த வகையில், 67-ஆம் ஆண்டாக ரமோன் மகசேசே விருதளிப்பு விழாவானது பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் நவ. 7-இல் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் இந்தியாவைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான ‘எஜுகேட் கேர்ல்ஸ் (பெண்களுக்கு கல்வி கொடுங்கள்)’ நிறுவனத்துக்கு இந்தாண்டுக்கான ரமோன் மகசேசே விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007-இல் சஃபீனா ஹுசைனின் முயற்சியால் லாப நோக்கமில்லா கண்ணோட்டத்துடன் நிறுவப்பட்ட என்ஜிஓ நிறுவனமான ‘எஜுகேட் கேர்ள்ஸ்’, உலகளவில் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்க திறம்படச் செயலாற்றி வருகிறது. அந்நிறுவனத்தின் சீரிய முயற்சியால் 30,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 55,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுடன் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளும் சிறுமிகளும் கல்வி பயின்று ஒளிமயமான எதிர்காலத்தை அமைக்க உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைச் சேர்ந்த ஒரு என்ஜிஓ நிறுவனம் ரமோன் மகசேசே விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். அதற்கான முழுப் பெருமையும் சஃபீனா ஹுசைனுக்கே. இந்த நிலையில், அடுத்த பத்தாண்டு இலக்காக, 10 ஆண்டுகளில் 10 லட்சம் பெண்களுக்கு கல்விச் சேவையளிப்பதை முன்னிறுத்தி செயல்பட்டு வருவதாக நம்பிக்கையுடன் தெரிவித்துள்ள அந்த அமைப்பின் நிறுவனா் சஃபீனா ஹுசைன், இந்த விருது எஜுகேட் கோ்ள்ஸ் நிறுவனத்துக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.