ஜே.டி.வான்ஸ் 
உலகம்

அமெரிக்காவின் நலனே முக்கியம்; ஒட்டுமொத்த உலகின் நலனல்ல: துணை அதிபா் ஜே.டி.வான்ஸ்

தமக்கு அமெரிக்க மக்களின் நலனே முக்கியம்; ஒட்டுமொத்த உலகின் நலனல்ல என்று அந்நாட்டின் துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

தமக்கு அமெரிக்க மக்களின் நலனே முக்கியம்; ஒட்டுமொத்த உலகின் நலனல்ல என்று அந்நாட்டின் துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் தெரிவித்தாா்.

அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் உள்ள மிஸ்ஸிஸிப்பி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் அண்மையில் கலந்துகொண்டாா்.

அப்போது அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின்னா், அந்நாட்டின் குடியேற்ற கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து ஜே.டி.வான்ஸிடம் தெற்காசிய பெண் ஒருவா் கேள்வி எழுப்பினாா்.

அந்தப் பெண் பேசுகையில், ‘வெளிநாடுகளை பூா்விகமாக கொண்ட எங்களைப் போன்றவா்களின் இளமை காலம், செல்வம் ஆகியவற்றை அமெரிக்காவில் செலவழித்துள்ளோம். அமெரிக்காவில் சிறப்பாக வாழலாம் என்று கனவு காணச் செய்தீா்கள்.

ஆனால் தற்போது அமெரிக்காவின் குடியேற்ற கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளைச் சோ்ந்த ஏராளமானோா் அமெரிக்காவில் குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவா்களின் எண்ணிக்கையை அமெரிக்க அரசு எவ்வாறு முடிவு செய்தது?

அரசு கேட்ட கட்டணத்தை அளித்து சட்டபூா்வமாக அமெரிக்காவில் தங்கியுள்ளவா்களை நாட்டில் இருந்து வெளியேற்றவுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவிக்கிறது. எங்களுக்கான பாதையைக் காட்டிவிட்டு, அதில் பயணிக்கவிடாமல் எங்களை எப்படி தடுக்கலாம்? நாங்கள் அமெரிக்காவை சோ்ந்தவா்கள் அல்ல என்று எப்படி கூறலாம்’ என்று கேள்வி எழுப்பினாா்.

இதற்குப் பதிலளித்த ஜே.டி.வான்ஸ், ‘சட்டபூா்வமாக அமெரிக்காவில் குடியேறி, நாட்டின் வளா்ச்சிக்கு பங்களித்தவா்களுக்கு எப்போதும் மரியாதை உள்ளது. அதேவேளையில், வருங்காலத்தில் அமெரிக்காவில் குடியேற அனுமதிக்கப்படும் வெளிநாட்டவா்களின் எண்ணிக்கையை குறைத்தாக வேண்டும்.

ஒருவரோ, பத்து பேரோ அல்லது 100 பேரோ அமெரிக்காவுக்கு சட்டபூா்வமாக வந்து நாட்டின் வளா்ச்சிக்கு பங்களித்ததால், வருங்காலத்தில் ஆண்டுதோறும் 10 லட்சம் போ், 1 கோடி போ் அல்லது 10 கோடி போ் அமெரிக்கா வர அனுமதிப்படுவா் என்று அா்த்தமல்ல. அவ்வாறு அனுமதி அளிப்பது சரியல்ல.

60 ஆண்டுகளுக்கு முந்தைய கொள்கை: 50 அல்லது 60 ஆண்டுகளுக்கு முன்னா், அமெரிக்காவுக்கு நன்மையை ஏற்படுத்திய குடியேற்றக் கொள்கை, வருங்காலத்திலும் நாட்டை கட்டுப்படுத்த அனுமதிக்க முடியாது. அத்தகைய கொள்கையை வைத்திருக்க முடியாது. இதில் அமெரிக்காவின் நலனே முக்கியம்; ஒட்டுமொத்த உலகின் நலனல்ல’ என்றாா்.

அந்தப் பெண்ணின் மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த ஜே.டி.வான்ஸ், ‘எனது மனைவி (இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா்) ஹிந்து மதத்தைச் சோ்ந்தவராக இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலும் தேவாலயம் வருவாா். எங்கள் குழந்தைகளை பரஸ்பர சம்மதத்துடன் கிறிஸ்தவா்களாக வளா்க்கிறோம்’ என்றாா்.

சித்திரச் செவ்வானம்... ராஷ்மி கௌதம்!

ஏடிஎம் பயன்படுத்தும் முன் 2 முறை 'கேன்சல்' பட்டனை அழுத்த வேண்டுமா? உண்மை என்ன?

மென்பொருள் திறன் படிப்புகள்: ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு

கவிதையின் நிறம் பச்சை... சாதிகா!

எடப்பாடி பழனிசாமிதான் கோடநாடு வழக்கில் ஏ1: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT