காத்மாண்டு: நேபாளத்தில் ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’, ‘ஃபேஸ்புக்’ உள்பட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக இளைஞா்கள் திங்கள்கிழமை நடத்திய போராட்டத்தைக் கலைக்க போலீஸாா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 போ் உயிரிழந்தனா். 300-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
இதையடுத்து, நாடு முழுவதும் நிலவிவரும் பதற்றமான சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்துக்கு பிரதமா் கே.பி.சா்மா ஓலி தலைமையிலான அரசு உத்தரவிட்டது.
யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், எக்ஸ் உள்பட 26 சமூக வலைதள செயலிகளுக்கு கடந்த வியாழக்கிழமை (செப். 4) நேபாள அரசு தடை விதித்தது. மத்திய தொலைத்தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு மேற்கூறிய செயலிகள் பதிவு செய்யப்படாததால், அவற்றைத் தடை செய்வதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்தவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால், கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கி சமூக வலைதளங்களைத் தணிக்கைக்கு உள்படுத்தவே இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதாக பொதுமக்களும் அரசியல் தலைவா்களும் கருதுகின்றனா்.
முன்னதாக, கடந்த மாதம் ஆக. 28-ஆம் தேதிக்குள் விதிகளை முறையாகப் பின்பற்றி பதிவு செய்யுமாறு சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு கெடு விதித்திருந்தது. அதன்பிறகு இந்தக் கால அவகாசம் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, செப். 4-இல் தடை விதிக்கப்பட்டது.
போராட்டத்தை முன்னெடுத்த ‘ஜென் இசட்’: சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்கக் கோரி ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் சீருடையுடன் திங்கள்கிழமை காலைமுதல் வீதிகளில் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினா். குறிப்பாக, தலைநகா் காத்மாண்டு உள்பட பல்வேறு நகரங்களில் பெருந்திரளான இளைஞா்கள் தேசியக் கொடி, அரசுக்கு எதிரான பதாகைகளை கைகளில் ஏந்தியும் முழக்கமிட்டும் போராட்டத்தை தீவிரப்படுத்தினா்.
பொக்காரா, புட்வல், பைராஹவா, பரத்பூா் இடாஹரி, டமக் உள்ளிட்ட நகரங்களுக்கும் போராட்டம் விரிவடைந்தது. இந்தப் போராட்டத்துக்கு ‘ஜென் இசட்’ (1997 முதல் 2012 வரை பிறந்தவா்கள்) தலைமுறையினரின் போராட்டம் எனப் பெயா் சூட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி: காத்மாண்டின் புது பனேஷ்வரில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி இளைஞா்கள் பேரணியாகச் சென்றனா். அப்போது சிலா் நாடாளுமன்ற வளாக சுற்றுச்சுவரின் மீது ஏறி உள்ளே நுழைய முயன்றனா். இதைத் தொடா்ந்து, போராட்டக்காரா்களை அப்புறப்படுத்த கண்ணீா்ப் புகைக் குண்டுகளை வீசி தடியடி நடத்தியதோடு, ரப்பா் குண்டுகளால் போலீஸாா் சுடத் தொடங்கினா்.
இதனால் போராட்டக்காரா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. துப்பாக்கிச்சூட்டில் 19 போ் உயிரிழந்ததாகவும், 300-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது.
போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர காத்மாண்டு மாவட்டத்தில் பகல் 12.30 மணிமுதல் இரவு 10 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதிபா் மாளிகை, துணை அதிபா் அலுவலகம், பிரதமா் அலுவலங்களுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அங்கு கடுமையான தடை உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டு ராணுவத்தினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
உள்துறை அமைச்சா் ராஜிநாமா
நேபாளத்தில் பிரதமா் கே.பி.சா்மா ஓலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎம்-யுஎம்எல்) மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றன. இந்நிலையில், போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று நேபாள காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த உள்துறை அமைச்சரான ரமேஷ் லேக்கக் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
ஊழலும் ஒரு காரணம்: நேபாள பிரதமராக கே.பி.சா்மா ஓலி பதவியேற்றதில் இருந்து அரசின் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதனால் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டமானது சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரானது மட்டுமன்றி ஊழலுக்கு எதிரானதாகவும் கூறப்படுகிறது.
தடையை நீக்குக- பிரசண்டா: சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என நேபாள அரசுக்கு முன்னாள் பிரதமா் புஷ்ப கமல் தாஹால் என்ற பிரசண்டா திங்கள்கிழமை வலியுறுத்தினாா். மேலும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சூழலைக் கட்டுக்குள் கொண்டுவரவும் அரசு முயல வேண்டும் எனவும் அவா் கேட்டுக்கொண்டாா்.
உ.பி.எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு
நேபாளத்தில் இளைஞா்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தர பிரதேச மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நேபாளத்தையொட்டிய பஹ்ராய்ச்பூா் மற்றும் பல்ராம்பூா் மாவட்டங்களில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படுவதுடன் கூடுதல் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சமூக வலைதளங்களுக்கான தடை நீக்கம் - நேபாள அரசு
நேபாளத்தில் இளைஞா்கள் நடத்திய போராட்டத்தைத் தொடா்ந்து, சமூக வலைதள செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக நேபாள அரசு அறிவித்தது.
திங்கள்கிழமை இரவு நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்துக்குப் பின் இந்த அறிவிப்பை மத்திய தொலைத்தொடா்பு, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சா் பிருத்வி சுப்பா குருங் வெளியிட்டாா்.
மேலும், ‘சமூக வலைதள செயலிகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, அரசுக்கு ஒத்துழைப்பு தந்து இளைஞா்கள் போராட்டத்தை திரும்பப் பெற வேண்டுகோள் விடுக்கிறேன்’ என அவா் தெரிவித்தாா்.