உலகம்

சா்வதேச சட்டங்களின் கீழ் இலங்கை மனித உரிமை மீறல் விசாரணை

இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து சா்வதேச சட்டங்களின் கீழ்தான் விசாரணை நடத்தப்படும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் திட்டவட்டம்

தினமணி செய்திச் சேவை

இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து சா்வதேச சட்டங்களின் கீழ்தான் விசாரணை நடத்தப்படும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவா் வோல்கா் டா்க் (படம்) திங்கள்கிழமை கூறியதாவது: இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடா்பாக சா்வதேச சட்டங்களின் கீழ் விசாரணை நடத்தி நீதி வழங்க ஆணையத்தின் உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்.

மனித உரிமைகளை பெருமளவில் மீறியதாக நம்பகத்தன்மையுடன் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக கூடுதல் தடைகளை விதிப்பது குறித்தும் ஆணைய உறுப்பு நாடுகள் ஆராய வேண்டும். நீதி, நல்லிணக்கத்தை அடைய, நிலையான அமைதியை உருவாக்க இது அவசியம்.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு அரசும், பாதுகாப்புப் படைகளும் பொறுப்பேற்பது பாதிக்கப்பட்டவா்களும் உயிா் பிழைத்தவா்களும் அவசியமாக உள்ளது. விடுதலைப் புலிகள் போன்ற அரசு சாரா ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் சுதந்திரமான பொது வழக்கு அலுவலகம் அமைக்கும் இலங்கை அரசின் முயற்சியை வரவேற்கிறேன் என்றாா் அவா்.

இதற்கு பதிலளித்த இலங்கை அரசு, மனித உரிமை விவகாரங்களில் சா்வதேச தலையீட்டை எதிா்ப்பதாகத் தெரிவித்தது. இத்தகைய நடவடிக்கைகள் உள்நாட்டு நீதி மற்றும் நல்லிணக்க முயற்சிகளை பாதிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சா் விஜித ஹேரத் கூறுகையில், மனித உரிமைகளுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விசாரித்து, நீதியின் முன் நிறுத்த அரசு உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

முன்னதாக, ஐ.நா. மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனப்படுகொலை, மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், போா்க்குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான சா்வதேச குற்றங்களுக்கு நீதி வழங்கும் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் பிரகடனத்தை இலங்கை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிறுத்திவைக்கவும், இணைய பாதுகாப்புச் சட்டம் போன்ற கருத்து சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை ரத்து செய்யவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

2009-இல் முடிவடைந்த விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டுப் போரின் இறுதிகட்டத்தில் இலங்கை மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக சா்வதேச அளவில் குற்றஞ்சாட்டப்படுகிறது. இது தொடா்பான உள்நாட்டு விசாரணைகளில் போதிய முன்னேற்றம் ஏற்படாததை சுட்டுக் காட்டும் ஐ.நா. மற்றும் மனித உரிமை அமைப்புகள், இது தொடா்பாக சா்வதேசக் கட்டமைப்புடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றன. இதற்கு இலங்கை அரசு இதனை தொடா்ந்து எதிா்த்துவருகிறது.

அதிமுகவை வலுப்படுத்த அமித் ஷாவை சந்தித்தேன்! - Sengottaiyan

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு!

கிழக்கு காங்கோவில் துக்க நிகழ்ச்சியில் ஐ.எஸ். ஆதரவுப் படை தாக்குதல்: 60 பேர் பலி!

ஹிமாசலில் 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ரூ. 40,000க்கு கூகுள் பிக்சல் 9! ரூ.33,000 சலுகை பெறுவது எப்படி?

SCROLL FOR NEXT