நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழல் மற்றும் அரசின் பிற நடவடிக்கைகள், சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவற்றுக்கு எதிராக கலவரம் மூண்டநிலையில், இந்திய எல்லைப் பகுதிகளில் உச்சகட்ட கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.
இந்திய - நேபாள எல்லைப் பகுதியில் சாஸ்த்ரா எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் மாநில காவல்துறையினரும் இணைந்து பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வரும் நிலையில், நேபாளத்தின் பதற்றம் இந்திய எல்லைக்குள் நுழைந்துவிடாமல் தடுக்கும் வகையில், எல்லைக்குள் நுழைபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - நேபாளம் இடையே 1,751 கிலோ மீட்டர் தொலைவுக்கு எல்லைப் பகிரப்பட்டு வருகிறது. இதில் உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், பிகார், சிக்கிம், மேற்கு வங்கம் மாநிலங்களும் அடங்கும். இந்த மாநிலங்களிலிருந்து நேபாள எல்லைக்குள் மக்களும் சரக்குகளும் இடம்பெயர்வதற்கு புதிய கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், நேபாள மக்கள் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் இந்தியர்கள் மட்டுமே நேபாளத்திலிருந்து இந்தியா வர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், அத்தியாவசிய தேவையின்றி மக்கள் யாரும் நேபாளம் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதலில், சமூக வலைத்தளங்களுக்கான தடையை எதிர்த்து மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்ட போதும் போராட்டம் ஓயவில்லை. செவ்வாயன்று அது கலவரமாக மாறியது. சுமார் 22 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
நேபாளத்தில் இளைஞா்களின் போராட்டம் தீவிரமடைந்து, கலவரமாக வெடித்ததைத்தொடா்ந்து பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி ராஜிநாமா செய்த நிலையில், இரண்டு நாள்களாக போர்க்களமாக மாறியிருந்த நேபாளத்தில் இன்று அமைதி திரும்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.