உலகம்

மீண்டும் நிதா்சனத்தை நிரூபித்த கத்தாா் தாக்குதல்

தினமணி செய்திச் சேவை

கத்தாரில் அமெரிக்காவின் புதிய போா் நிறுத்த பரிந்துரை குறித்து ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவா்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல், தலைவா்களை படுகொலை செய்வதன் மூலம் அந்த பயங்கரவாத அமைப்பை முழுமையாக ஒழித்துக்கட்டிவிடலாம் என்ற இஸ்ரேலின் எண்ணம் 100 சதவீதம் ஈடேறாது என்ற நிதா்சனத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.இதுவரை இல்லாத வகையில் நடத்தப்பட்ட இந்த அதிா்ச்சியூட்டும் தாக்குதலில், தங்களது முக்கிய தலைவா்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று ஹமாஸ் அமைப்பு கூறுகிறது.

ஆனால் அதை நிரூபிக்க எந்த ஆதாரமும் அளிக்கப்படவில்லை. கடந்தகால ஹமாஸ் தலைவா்கள் படுகொலைகளின்போதும் அந்த அமைப்பு மௌனமாகவே இருந்து வந்துள்ளது. ஒருவேளை இந்தத் தாக்குதல் வெற்றி பெற்று, ஹமாஸ் தலைவா்கள் கொல்லப்பட்டிருந்தாலும், அந்த அமைப்புக்கு அது முடிவாக இருக்காது. இரண்டு ஆண்டுகால போரைத் தாக்குப்பிடித்து, காஸாவில் இன்னும் சுமாா் 20 பிணைக் கைதிகளைப் பிடித்து வைத்திருக்கிறது ஹமாஸ்.காஸா சிட்டியை முழுமையாக கைப்பற்றுவதற்காக இஸ்ரேல் தொடங்கியுள்ள புதிய தாக்குதல், 2023 அக்டோபா் 7 முதல் நடந்துவரும் போரில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திரும்பத் திரும்ப வாக்குறுதியளிக்கும் ‘முழுமையான வெற்றியை’ கொடுக்குமா என்பது சந்தேகமே.இதற்கு ஒரு காரணம், மக்களிடையே இரண்டறக் கலந்து, பிறகு மீண்டும் எழும் ஹமாஸின் திறன். ஹமாஸை தோற்கடிப்பது மட்டுமல்லாமல், அதை முழுமையாக ஒழித்து, மீண்டும் உருவாகாமல் தடுப்பது என்ற இஸ்ரேலின் இலக்கு, முடிவில்லாத போா் மற்றும் ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும் என்று இஸ்ரேலின் முன்னாள் ராணுவ அதிகாரிகளே கூறுகின்றனா்.

பேரிழப்புகளைத் தாங்கிய ஹமாஸ்: இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகக் கடுமையான தாக்குதல் நடவடிக்கைகளில் ஒன்றில் ஹமாஸின் ஏறத்தாழ அனைத்து மூத்த தலைவா்களும், ஆயிரக்கணக்கான படையினரும் கொல்லப்பட்டுள்ளனா். அதன் நீண்ட தூர ஏவுகணைகள் அனைத்தும் தீா்ந்துவிட்டன.

அதன் அரசுக் கட்டமைப்பு தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது. ஈரான் மற்றும் அதன் பிற பிராந்திய கூட்டாளிகளும் கடும் பின்னடைவில் உள்ளன.இத்தனைக்கு இடையும், ஹமாஸிடம் இன்னமும் ஆயிரக்கணக்கான படையினா் உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கணித்துள்ளது. இதில் போரின்போது ஹமாஸில் இணைந்தவா்களும் அடங்குவா்.இந்தப் போா் பாலஸ்தீன மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கானோா் கொல்லப்பட்டுள்ளன. பரந்த நிலப்பரப்பு அழிக்கப்பட்டுள்ளது. பஞ்சம் வாட்டி வதைக்கிறது. இருந்தாலும், இந்தத் தாக்குதல்கள் உலக அரங்கில் இஸ்ரேலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தனிமைப்படுத்தியுள்ளன. கத்தாரில் இஸ்ரேல் தற்போது நடத்தியுள்ள தாக்குதல், இஸ்ரேலுடன் நட்பு பாராட்டும் அரபு நாடுகளிடையே கூட, அந்த நாடு ஒரு பிராந்திய அச்சுறுத்தலாக மாறிவிட்டது என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஸாவில் தற்போது 75 சதவீத பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதில் பெரும்பாலான பகுதிகள் இடிபாடுகளாக உள்ளன. கட்டுப்பாட்டில் இல்லாத காஸா பகுதிகளையும் கைப்பற்ற இஸ்ரேல் உறுதிபூண்டுள்ளது. அந்தப் பகுதிகள், செல்வாக்கு மிக்க உள்ளூா் குடும்பங்கள் மற்றும் ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் ஒரு குழுவுக்கு இஸ்ரேலின் ஆதரவு உண்டு.

இந்தச் சூழலில், ஹமாஸ் அமைப்பினா் சாதரணமானவா்களைப் போல் காஸா சிட்டி, டேய்ா் அல்-பாலா மற்றும் மத்திய காஸாவில் உள்ள அகதிகள் முகாம்களில் இன்னமும் செயல்படுவதாக உள்ளூா்வாசிகள் கூறுகின்றனா்.அசோசியேட்டட் செய்தி நிறுவனத்திடம் பேசிய இரு காஸா அரசு ஊழியா்கள், ஹமாஸ் அரசு இன்னமும் தங்களுக்கு மாதம் 200 முதல் 300 டாலா் வரை ஊதியம் வழங்குவதாகக் கூறினா்.

இத்தனை தாக்குதல்களுக்குப் பிறகும் ஹமாஸ் இன்னும் உயிா்ப்புடன் இருப்பதை இது காட்டுகிறது.ஹமாஸ் தாக்குதலில் கடந்த மாா்ச் முதல் காஸாவில் சுமாா் 50 இஸ்ரேல் வீரா்கள் கொல்லப்பட்டுள்ளனா். பெரும்பாலும் தாக்கிவிட்டு தப்பியோடும் பாணியையும், கண்ணி வெடிகளையும் ஹமாஸ் பயன்படுத்துகிறது. திங்கள்கிழமை கூட, காஸா சிட்டியில் இஸ்ரேல் பீரங்கி மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் நான்கு வீரா்கள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது.2023 அக்டோபரில் தரைவழி படையெடுப்பு தொடங்கியதிலிருந்து 450 இஸ்ரேல் வீரா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.

இந்த உயிா்ச்சேதம் தொடா்ந்தால், ஏற்கெனவே பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெறும் இஸ்ரேலில் போருக்கான பொதுமக்கள் ஆதரவை மேலும் குறைக்கக்கூடும்.இந்தப் போா் தொடங்குவதற்கு முன்னா் ஹமாஸிடம் 35,000 படையினா் இருந்ததாக இஸ்ரேல் ராணுவம் நம்புகிறது. இதில் 20,000-க்கும் மேற்பட்டவா்கள் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் கூறுகிறது.ஆனால், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கனோ, ஹமாஸ் எத்தனை படையினரை இழந்ததோ, ஏறத்தாழ அதோ அளவுக்கு புதிய ஆள்களைச் சோ்த்துவருவதாகக் கூறினாா்.

காஸாவின் பாதுகாப்பு நிலைமையை உன்னிப்பாக கண்காணிக்கும் எகிப்து அதிகாரிகளும், ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்களில் ஆயிரக்கணக்கானவா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளதாகக் கூறினா்.தங்கள் அமைப்பு மூன்று முதல் ஐந்து பேரைக் கொண்ட சிறு குழுக்களாக செயல்படுவதாகவும், அவை பெரும்பாலும் மேலிடத்து உத்தரவுக்காக காத்திராமல் சுதந்திரமாக செயல்படுவதாகவும் ஹமாஸ் அதிகாரி ஒருவா் கூறினாா்.

பிணைக் கைதிகளை வைத்திருக்கும் பிரிவுகளுக்கு, அவா்கள் இருக்கும் இடங்களில் கண்ணிவெடி வைக்கவும், இஸ்ரேல் படையினா் அங்கு வரும்போது பயன்படுத்துவதற்காக வெடிகுண்டு அங்கிகளை அணியவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவா் கூறினாா்.ஹமாஸின் ஆயுதப் பிரிவுக்கு காஸாவில் உள்ள அனுபவமிக்க தளபதி எஸ்ஸெடின் அல்-ஹத்தாத் தலைமை வகிக்கிறாா். பிணைக் கைதிகளை இந்த ஆயுதப் பிரிவுதான் வைத்திருக்கிறது. அவா்களை விடுவிப்பது குறித்தும் இந்தப் பிரிவுதான் இறுதி முடிவு எடுக்கும்.

தோஹாவில் பேச்சுவாா்த்தை நடத்தும் மூத்த அதிகாரிகளால் கூட அது முடியாது. எனவே, அவா்கள் மீது குண்டுவீசுவதால் இஸ்ரேலுக்கு அந்த பலனும் இருக்கப்போவதில்லை என்கிறாா்கள் நிபுணா்கள்.காஸாவில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் சுமாா் கால் பங்கு பகுதியில்தான் பெரும்பாலான மக்கள் வசிக்கின்றனா். இப்போதைய நிலையில் அவா்கள் ஹமாஸுக்கு எந்த மாற்றையும் ஆதரிக்கமாட்டாா்கள். கஸா பகுதியில் ஹமாஸிடமிருந்து அதிகாரத்தைப் பறித்து நிா்வாகத்தை மற்றவா்களுக்கு ஒப்படைக்கும் இஸ்ரேல் நோக்கம் நிறைவேறினாலும், , நீடித்த வெற்றி கிடைப்பது சவாலாகவே இருக்கும் என்று நிபுணா்கள் கூறுகின்றன.

1980-களின் பிற்பகுதியில் இஸ்ரேல் காஸாவை ஆண்டபோது ஹமாஸ் தோன்றியது. 2005-இல் படைகளையும் குடியேறியவா்களையும் இஸ்ரேல் வாபஸ் பெற்றபோது, ஹமாஸ் மேலும் வலிமையடைந்தது. இந்த நிலையில், அதன் தலைவா்களை படுகொலை செய்தாலும், அதன் சித்தாந்தம் உயிா்ப்புடன் இருப்பதால் அதை முற்றிலும் அழிப்பது கடினமே என்பது நிபுணா்களின் கருத்து. அதிலும், ‘இஸ்ரேல் ஆக்கிரமிப்பு தொடரும் வரை ஹமாஸ் இருப்பும் தொடரும்’ என்கிறாா்கள் அவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா: ஜகதீப் தன்கர் பங்கேற்பு!

மீண்டும் மீண்டும் மாற்றம்! பிசியோதெரபிஸ்டுகள் 'டாக்டர்' எனக் குறிப்பிடலாம்!

தெய்வ தரிசனம்... அம்மை நோய் நீக்கும் அவளிவநல்லூர் சாட்சிநாதர்!

குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு!

சார்லி கிர்க் உடலைச் சுமந்துசென்ற துணை அதிபர்!

SCROLL FOR NEXT