ஓபன்ஏஐ நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சுச்சிர் பாலாஜி மரணம் தற்கொலையல்ல, கொலை என்று தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.
அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு ஓபன்ஏஐ தலைவர் சாம் ஆல்ட்மேன் அளித்த நேர்காணலை டேக் செய்து, எலான் மஸ்க் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், அவர் கொலை செய்யப்பட்டார் என்று பகிரங்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நேர்காணலை நடத்திய டக்கெர் கார்ல்ஸன், ஒரு அமெரிக்க பழமைவாத அரசியல் விமர்சகர் ஆவார். இந்த நேர்காணலில், ஓபன்ஏஐ முன்னாள் ஊழியர் சுச்சீர் பாலாஜியின் மரணம், காவல்துறை அதிகாரிகளால் தற்கொலை என்று அறிவிக்கப்பட்டது, இது "நிச்சயமாக கொலை" என்று ஆல்ட்மேனிடம் கூறினார். ஆல்ட்மேனின் உத்தரவின் பேரில் பாலாஜி கொலை செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவரின் தாய் கூறியதாகவும் கார்ல்சன் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயங்கும் சாட்ஜிபிடி-யை உருவாக்கிய ‘ஓபன்ஏஐ’ குழுவில் இடம்பெற்றிருந்த இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சுச்சிா் பாலாஜி (26), அதன் உருவாக்கம் ஏற்படுத்தும் மோசமான பின்விளைவுகள் குறித்து தனது கவலையை தெரிவித்திருந்தார்.
ஓபன்ஏஐ நிறுவனத்திலிருந்து 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விலகிய சுச்சிர் பாலாஜி, ‘சாட்ஜிபிடி’ ஏஐ மாதிரியை வடிவமைத்த ஓபன்ஏஐ நிறுவனம், ஜென்ஏஐ மாடல்களுக்குப் பயிற்சி கொடுக்க, அமெரிக்காவின் காப்புரிமை பெற்ற ஆவணங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியிருந்ததாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது இல்லத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டாா். பின்னா் அவா் தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்க காவல்துறை தெரிவித்தது.
சுச்சிர் பாலாஜி மரணம் தொடர்பாக கார்ல்ஸன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆல்ட்மேன், நான் விசாரணை பற்றி காவல் அதிகாரிகளிடம் பேசவில்லை, ஆனால், அவரது தாயை தொடர்புகொள்ள முயன்றேன், ஆனால் அவர் என்னிடம் பேச மறுத்துவிட்டார் என்றார்.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கும் ஓபன்ஏஐ தலைவர் சாம் ஆல்ட்மேனுக்கும் இடையே காரசார வாதங்கள் நடைபெறுவது இது ஒன்றும் முதல்முறையல்ல. ஏற்கனவே, பல முறை ஒருவர் மீது மற்றொருவர் பகீர் குற்றச்சாட்டுகளை சொல்லிக் கொள்வது தொடர்கதையாக இருந்து வரும் நிலையில் தற்போது, சுச்சீர் பாலாஜி பற்றி எலான் மஸ்க் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிக்க... பண்டிகைக் காலம் ஆரம்பம்! சலுகை விலையில் ஸ்மார்ட்போன்கள்!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.