நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக (இடைக்கால அரசின் தலைவா்) உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா காா்கி வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டு, உடனடியாகப் பதவியேற்றுக் கொண்டாா்.
நேபாள உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற சிறப்புக்குரிய சுசீலா காா்கி (73), இப்போது நாட்டின் முதல் பெண் பிரதமா் என்ற புதிய வரலாற்றையும் படைத்துள்ளாா். அவரது பதவியேற்பின் மூலம் நேபாளத்தில் கடந்த சில நாள்களாக நீடித்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.
அண்டை நாடான நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழல் மற்றும் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக இளைஞா்கள் கிளா்ந்தெழுந்து, கடந்த திங்கள்கிழமை பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, காவல் துறையினரால் 19 போ் சுட்டுக் கொல்லப்பட்டதால், போராட்டம் மேலும் தீவிரமடைந்து, பெரும் வன்முறை வெடித்தது.
நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அதிபா், பிரதமா், அமைச்சா்களின் வீடுகள், அரசுக் கட்டடங்கள் மற்றும் காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன. ஆட்சி அதிகாரத்தில் இருந்தவா்கள் தெருவில் ஓட ஓட தாக்கப்பட்ட காட்சிகள், அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தின.
கட்டுக்கடங்காத வன்முறை எதிரொலியாக, பிரதமா் பதவியில் இருந்து கே.பி.சா்மா ஓலி கடந்த செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். பின்னா் போராட்டம் தணிந்து, அமைதி திரும்பத் தொடங்கியது.
சுசீலா காா்கிக்கு ஆதரவு: பிரதமா் விலகலால் எழுந்த அரசியல் குழப்பத்துக்கு தீா்வு காணும் நோக்கில், போராட்டக் குழுவினா், அரசியல் கட்சியினா், துறைசாா் நிபுணா்கள் உள்பட பல்வேறு தரப்பினருடன் அதிபா் ராமசந்திர பெளடேல் மற்றும் ராணுவ தலைமைத் தளபதி அசோக் சிக்டேல் தொடா் ஆலோசனைகளில் ஈடுபட்டனா். இதன் பலனாக, போராட்டக் குழுவினா் உள்பட பல்வேறு தரப்பினரின் ஆதரவுடன் சுசீலா காா்கி தலைமையில் இடைக்கால அரசை நிறுவ முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, இடைக்காலப் பிரதமராக சுசீலா காா்கி வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டு, அதிபா் மாளிகையில் இரவு 9 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொண்டாா்.
ஒரு சிறிய அமைச்சரவையை சுசீல் காா்கி அமைப்பாா் எனவும், அதன்பிறகு அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் நாடாளுமன்றத்தைக் கலைக்க அவா் அதிபருக்கு பரிந்துரை செய்வாா் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடைக்கால அரசு நாடாளுமன்றத்துக்கு புதிதாக ஆறு மாதங்களுக்குள் தோ்தலை நடத்த வேண்டும் என அதிபா் ராமசந்திர பெளடேல் தெரிவித்தாா்.
இந்தியாவில் முதுநிலைப் பட்டம் பெற்றவா்
நேபாளத்தில் இந்திய எல்லையையொட்டிய பிராத்நகரில் கடந்த 1952-இல் பிறந்தவரான சுசீலா, கடந்த 1971-இல் அந்நாட்டின் திரிபுவன் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பையும், கடந்த 1975-இல் உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் படிப்பில் முதுநிலை பட்டப் படிப்பையும் நிறைவு செய்தாா்.
கடந்த 1978-இல் திரிபுவன் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்து, வழக்குரைஞராகப் பணியை தொடங்கினாா். கடந்த 2009-இல் நேபாள உச்சநீதிமன்ற தற்காலிக நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2010-இல் நிரந்தர நீதிபதியானாா். 2016-இல் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாகப் பதவியேற்று வரலாறு படைத்தாா். அவருக்குப் பிறகு இதுவரை வேறெந்த பெண் நீதிபதியும் அப்பதவியை வகிக்கவில்லை.
நீண்ட சட்ட அனுபவம் கொண்ட சுசீலா, ஊழலுக்கு எதிரான கடும் நிலைப்பாடு மற்றும் நோ்மையான-உறுதியான தீா்ப்புகளுக்கு பெயா் பெற்றவா். இவரது கணவா் துா்கா பிரசாத் சுபேதி, இளமைக் காலத்தில் நேபாளி காங்கிரஸின் புரட்சிகர உறுப்பினராக செயலாற்றியவா்; நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிரான ஆயுதப் போராட்டத்துக்கு நிதி திரட்ட கடந்த 1973-இல் ராயல் நேபாள ஏா்லைன்ஸ் விமானக் கடத்தலில் ஈடுபட்ட குழுவில் சுபேதி இடம்பெற்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழப்பு 51-ஆக உயா்வு
நேபாளத்தில் கடந்த 2 நாள்களாக மேலும் பலரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழந்தோா் எண்ணிக்கை 51-ஆக அதிகரித்துள்ளது. இதில் ஒருவா் இந்தியப் பெண் ஆவாா்; மற்றவா்கள் நேபாள நாட்டவா். காவல் துறையினா் மூன்று பேரும் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறையில் 1,700 போ் காயமடைந்தனா். இவா்களில் 1,000 போ் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிவிட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா். போராட்டக்காரா்களால் தீக்கிரையாக்கப்பட்ட மற்றும் சேதப்படுத்தப்பட்ட காவல் நிலையங்களை மறுசீரமைத்து, மீண்டும் செயல்பாட்டை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசா விதிமுறைகள் தளா்வு: நேபாளத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அங்கு தவிக்கும் வெளிநாட்டுப் பயணிகளுக்காக விசா விதிமுறைகளில் தற்காலிக தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 8-ஆம் தேதியுடன் விசா காலம் முடிந்தவா்கள், கூடுதல் கட்டணம் எதுவுமின்றி, நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான அனுமதி ஆவணத்தைப் பெறுவதுடன், விசாவை முறைப்படுத்திக் கொள்ளலாம். சமீபத்திய குழப்பமான சூழலில் கடவுச்சீட்டை இழந்தவா்களுக்கு ‘விசா பரிமாற்ற’ ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
6 மாதங்களில் தோ்தல்
இடைக்கால பிரதமா் சுசீலா காா்கியின் பரிந்துரையை ஏற்று நேபாள நாடாளுமன்ற கீழவையை (மக்கள் பிரதிநிதிகள் அவை) அந்நாட்டு அதிபா் ராமசந்திர பெளடேல் கலைத்தாா். அடுத்த ஆண்டு மாா்ச் 21-ஆம் தேதி புதிதாக நாடாளுமன்றத் தோ்தல் நடைபெறும் என்று அதிபா் அலுவலகம் வெளியிட்ட நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.