போலந்து எல்லைக்குள் ரஷியாவின் ட்ரோன்கள் நுழைந்த சம்பவம் தவறுதலாக நடந்திருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.
ரஷியா - உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைனில் தாக்குதல் நடத்திய ரஷிய ட்ரோன்கள் போலந்து நாட்டுக்குள் நுழைந்தது.
இதையடுத்து ரஷிய ட்ரோன்களை போலந்து ராணுவம் சுட்டு வீழ்த்தின. நேட்டோவின் உறுப்பினர் நாட்டுக்குள் ட்ரோன்களை அனுப்பிய ரஷியாவுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று போலந்தும் உக்ரைனும் நேட்டோ அமைப்பை வலியுறுத்தியுள்ளன.
மேலும், நேட்டோ ஒப்பந்தத்தின் பிரிவு 4 -ஐ செயல்படுத்துவதாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் அறிவித்துள்ளார். இந்த பிரிவு நேட்டோ அமைப்பை கூட்டி உறுப்பு நாட்டின் பாதுகாப்புக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து விவாதிக்க அனுமதிக்கிறது.
இதனிடையே, நேட்டோவின் வான் எல்லையைப் பாதுகாப்பதற்காக 3 ரஃபேல் விமானங்களை பிரான்ஸ் அரசு அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப் கூறியதாவது:
"இது தவறுதலாக நடந்திருக்கலாம். இருப்பினும், இந்த சூழலைக் கண்டு நாம் மகிழ்ச்சி அடையவில்லை. இந்த பிரச்னை விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருக்கும் எந்தவொரு நாட்டின் மீதான தாக்குதலோ போர் நடவடிக்கையோ, ஒட்டுமொத்த நேட்டோ அமைப்பின் மீதான செயல்பாடாகக் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.