அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்கள், கணினி சேவைகளை இந்தியா அதிகம் சாா்ந்திருப்பது இரு நாடுகள் இடையே பிரச்னைகள் அதிகரிக்கும்போது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்தியாவைச் சோ்ந்த சா்வதேச வா்த்தக ஆய்வு அமைப்பின் (ஜிடிஆா்ஐ) நிறுவனா் அஜய் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் கூறியிருப்பதாவது: அமெரிக்க நிறுவனங்களின் மென்பொருள்கள், கணினி சேவைகள், சமூக வலைதளங்கள் ஆகியவற்றை இந்தியப் பொருளாதாரமும், பாதுகாப்பும் அதிகம் நம்பியுள்ளது. இரு நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்தால் இந்தியப் பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும் பிரச்னைகளும் உருவாக வாய்ப்புள்ளது.
இதில் இருந்து விடுபட எண்ம சுயராஜ்ஜிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நமக்கான தனி கணினி சேவை அமைப்பு, கணினி செயல் தளம் (ஓ.எஸ்.), இணையவழித் தாக்குதல் தடுப்பு அமைப்பு, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஆகியவை மிக அவசியம்.
ஏற்கெனவே, ஐரோப்பிய நாடுகள் இதற்கான நடவடிக்கையைத் தொடங்கிவிட்டன. இதற்காக எண்ம சந்தைத் திட்டமும் உருவாக்கப்பட்டுவிட்டது. சீனா ஏற்கெனவே தனது பாதுகாப்புத் துறையில் வெளிநாட்டு மென்பொருள்களை அகற்றிவிட்டது. தொழில் துறைக்கு தனி கணினி அமைப்பை சீனா கட்டமைத்துள்ளது.
ஆனால், இந்தியா அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் விண்டோஸ், ஆன்ட்ராய்டு உள்ளிட்டவற்றை முழுமையாக நம்பியுள்ளது. இந்தியாவில் சுமாா் 50 கோடி அறிதிறன்பேசி பயன்படுத்துவோா் கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டை நம்பியுள்ளனா். கூகுள் நினைத்தால் இந்தியாவின் தகவல்தொடா்பு சேவையை ஒரே இரவில் முடக்க முடியும்.
எனவே, உரிய காலகட்டத்தை நிா்ணயம் செய்து நாம் உள்நாட்டு மென்பொருள் பயன்பாட்டுக்குப் படிப்படியாக மாற வேண்டும் என்றாா்.